
ஆந்திர மாநிலம் வி.கோட்டா அருகே இரண்டு தினங்களுக்கு முன்பு காரை மறித்து 3,500 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இந்த வழக்கை வி.கோட்டா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் ஆந்திரா - தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் குற்றவாளிகளாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய சித்தூர் எஸ்.பி., 14 குற்றவாளிகளில் தலைமறைவாக இருந்த 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளியில் கைதுக்கு பயந்து தப்பி ஓடிய ஒருவர் மட்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்தார்.
தற்கொலைக்காக காரணம் என்ன?
இந்த கொள்ளை வழக்கில் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ஜெயப்பிரகாஷ்(33) தன்னுடன் வந்ததாக கூறியதன் அடிப்படையில் ஆந்திர காவல்துறையினர் ஜெயபிரகாஷை தேடி பேரணாம்பட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜெயப்பிரகாஷ் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து நேற்று பேரணாம்பட்டு அருகே உள்ள கொண்டப்பள்ளியில் உள்ள விவசாய நிலையத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜெயப்பிரகாஷின் சகோதரி கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மெலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயப்பிரகாஷ் தற்கொலை செய்து கொல்வதற்கு முன்பு ஆடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த ஆடியோவில், அந்த பகுதியைச் சேர்ந்த வழக்கில் சிக்கி உள்ளவர்கள் தான் எனது சாவுக்கு காரணம். வீட்டில் சும்மா இருந்த என்னை அவர்கள் தான் அழைத்துச் சென்றார்கள். எனது சாவுக்கு அவர்கள் தான் காரணம் வேறு யாரும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது ஆந்திர - தமிழக எல்லையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.