தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம்போல் இயங்கும். மின்னணு இ - சேவை காலை 08.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை இயங்கலாம். உணவகங்கள் காலை 06.00 மணிமுதல் காலை 10.00 மணிவரையும், மதியம் 12.00 மணி முதல் 03.00 மணிவரையும், மாலை 06.00 மணிமுதல் 09.00 மணிவரையும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும். ஒருவாரத்திற்கு மளிகை, காய்கறி, பழக்கடைகள் செயல்படாது. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ - பதிவு தேவையில்லை; மாவட்டம்விட்டு மாவட்டம் பயணிக்க இ - பதிவு தேவை. வேளாண் விளைபொருட்கள், இடுபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு முதல்வரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.