Skip to main content

"தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு கூட்டணி முடிவு" - மு.க.ஸ்டாலின் பேட்டி...

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

tn assembly election dmk mk stalin press meet

 

தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சென்னை கோபாலப்புரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "ஜனவரி 29- ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடந்துள்ளது. பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்து ரூபாய் 2,500 கொடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை.

 

தி.மு.க. அரசின் முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்துப் பிரச்சனைகள் கேட்டறியப்படும். மக்களிடம் தரப்படும் விண்ணப்பத்தில் குறைகளை எழுதித் தந்தால் 100 நாட்களில் பிரச்சனைத் தீர்க்கப்படும். மக்கள் பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். இக்கூட்டங்களில் ரேநடியாக பங்கெடுக்க முடியாதவர்கள் www.stalinani.com என்ற இணையதளத்திலோ 'ஸ்டாலின் அணி செயலி' மூலமாகவோ அல்லது 91710- 91710 என்ற எண்ணிலோ தங்கள் புகார்களை அளிக்கலாம். மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி என்று உறுதியளிக்கிறேன்.

tn assembly election dmk mk stalin press meet

 

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் வரும் ஜனவரி 29- ஆம் தேதி முதல் புதிய பரப்புரையைத் தொடங்குகிறேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பரப்புரையை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறேன். காலை, மாலை என 30 நாட்களுக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். தேர்தல் அறிக்கை வேறு; 100 நாள் செயல் திட்டம் வேறு. தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு கூட்டணிப் பற்றி முடிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.

 

‘விடியலை நோக்கி’, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ ஆகியவற்றைத் தொடர்ந்து 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்