தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (29/03/2021) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "1,55,102 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் 88,947 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் 1,20,807 வி.வி.பேடுகள் பயன்படுத்தப்பட உள்ளன. 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படும். வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குக்களைப் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 1,85,057 அரசு அலுவலர்களுக்குப் படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 89,185 அரசு ஊழியர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் 10,813, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 537. புகார் அதிகம் உள்ள தொகுதிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆணையம் முடிவெடுக்கும். தமிழகத்தில் இதுவரை ரூபாய் 319.02 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வருமான வரித்துறை அதிகாரிகளால் ரூபாய் 60.580 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் ரூபாய் 44.47 கோடி, சென்னையில் ரூபாய் 18.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அறிக்கை அனுப்பியுள்ளோம். மாவட்ட தேர்தல் அதிகாரி, எஸ்.பி. தந்த தகவலின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்" இவ்வாறு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்.