2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
நான்காவது நாளான இன்று (19/02/2020) சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், "ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். அதேபோல் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
![tn assembly dmk member questions and state law minister said](http://image.nakkheeran.in/cdn/farfuture/7M6ugRMr1K7xJz520AxnqrPaVZLHCEId_IKv7w5wm-k/1582104443/sites/default/files/inline-images/cm13.jpg)
இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். ஆளுநரின் நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளோம். ஏழு பேரையும் விடுவிக்க அரசின் அதிகாரத்துக்குட்பட்டு அனைத்தையும் செய்து விட்டோம். அமைச்சரவை முடிவு பற்றி அரசும் ஆளுநரிடம் தெரிவித்து விட்டது. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசால் தலையிட முடியாது" என்றார்.
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை விரைவில் விடுதலை செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், மூன்று மாணவிகளை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யவில்லை என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. திமுக ஆட்சியில் மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலை குற்றவாளிகளை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்; அதற்காகத்தான் காத்திருக்கிறோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.