தமிழகத்தில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகள் மூடப்படும் என்று அமைச்சர் ஆணைபிறப்பித்த அமைச்சர் செங்கோட்டையன் தான் தனியார் பள்ளிகளின் படிக்க விரும்பும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க விண்ணப்பித்தால் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும். அந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால் அரசுப்பள்ளியில் மாணவர்கள் குறைந்தால் பள்ளிகள் மூடப்படும் என்றும் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஒரு ஆணை. தனியாருக்கு குழந்தைகளை தாரை வார்த்துவிட்டு அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள் என்றால் எப்படி?
இந்த வகையில் தமிழ்நாட்டில் முதலில் மூடப்படும் ஒரு பள்ளியாக திருவரங்குளம் ஒன்றியம் வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியாக உள்ளது. கடந்த ஆண்டுவரை மாணவர்களுடன் இயங்கிய அந்த பள்ளி இந்த வருடம் இதுவரை ஒரு குழந்தை கூட அந்தப் பள்ளியில் சேரவில்லை. அந்த கிராமத்து குழந்தைகள் கூட வாகனங்களில் ஏறி தனியார் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். காரணம் கேட்டால் பள்ளி தலைமை ஆசிரியர் சரியில்லை அதனால் குழந்தைகளை சேர்க்கவில்லை என்று காரணம் சொல்லும் அந்த கிராம மக்கள் ஒரு பள்ளி மூடப்படுகிறதே என்பதை பற்றி கவலை கொண்ட இளைஞர்கள் மூடவிடாமல் செய்ய போராடி வருகின்றனர்.
ஆனால் இதே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள அல்லம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியை கடந்த வருடம் அக்டோபர் மாதம் சத்தமில்லாமல் மூடிவிட்டது அரசாங்கம். அல்லம்பட்டி, மணகுடி, தாழிச்சேரி ஆகிய கிராமங்களில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 50 குழந்தைகள் படித்துள்ளனர். அந்த நேரத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் வகுப்பறைக்கும் போதையில் சென்றதால் மாணவர்களை 2 கி. மீ தூரத்தில் உள்ள பச்சலூர் நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பினார்கள் பெற்றோர். படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 2 மாணவர்கள் மட்டும் படித்து வந்தனர். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டும் அக்டோபரில் பள்ளியை முழுமையாக மூடிவிட்டனர்.
ஏன் இப்படி.. என்ற கேள்வியை கிராம மக்களிடம் கேட்டால் எங்க ஊருக்கு அரசுப் பள்ளி வேண்டும் என்று போராடி வாங்கி வந்து முதலில் கொட்டகை அமைத்து அதில் பள்ளியை திறந்து மதிய உணவை கிராமமே இணைந்து போட்டோம். அப்படி தொடங்கியது தான் இந்த பள்ளி. அப்புறம் வந்த தலைமை ஆசிரியர் போதையிலேயே இருந்தார் அதனால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றினோம். பலர் தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பியதால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தாழிச்சேரியில் மட்டும் 20 குழந்தைகள் பச்சலூருக்கு போறாங்க என்றனர்.
தாழிச்சேரி இளைஞர்களோ.. அல்லம்பட்டி கிராம மக்கள் அவங்க பிள்ளைகளை தனியாரில் படிக்க வைத்துவிட்டு எங்க பிள்ளைகளை அவங்க ஊர் பள்ளிக் கூடத்துல படிக்கனும் என்று நினைப்பது எப்படி சரியாகும். முதல்ல அவங்க ஊர் பிள்ளைகளை சேர்த்துட்டு வந்து எங்களிடம் கேட்டிருந்தால் நாங்களும் சேர்த்திருப்போம். நாங்க சேர்க்கல அதனால் பள்ளிக் கூடம் போயிடுச்சு. பள்ளிக்கூடம் போகக் கூடாதுன்ன அல்லம்பட்டி மக்கள் நினைத்திருக்க வேண்டும் என்றனர்.
மேலும் சில இளைஞர்களோ.. குடிகார தலைமை ஆசிரியருக்கு பிறகு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் வந்த ஆசிரியை வீடு வீடாக சென்று மாணவர்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் பெற்றோர்கள் அனுப்பவில்லை. அதன் பிறகு வந்த ஆசிரியை ஒரு மாதிரி செஞ்சாங்க குழந்தைகளை பள்ளிக்குள்ளயே வச்சு பூட்டிட்டு போயிட்டாங்க. அந்த பிரச்சனைக்கு பிறகு 2 குழந்தைகள் கூட படிக்கல. மறுபடியும் கிராமத்தில் உள்ளவர்கள் நினைத்தால் தான் திறக்க முடியும். அதிகாரிகளும் திறக்க உதவி செய்ய வேண்டும் என்றானர். இப்படி அரசு சத்தமில்லாமல் அரசுப்பள்ளிகளை அடுத்தடுத்து மூடிக் கொண்டிருக்கிறது. காரணம் தனியார் பள்ளிக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணம் தான் என்கிறார்கள் அந்த இளைஞர்களே.