Skip to main content

தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிய பொதுமக்கள்! அதிகாரிகளை கண்டித்து தீக்குளிப்போம் என எச்சரிக்கை! 

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

 

கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அடுத்த ஆக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையத்தில் திட்டக்குடி - விருத்தாசலம் செல்லும் நெடுஞ்சாலையோரம் மழைக்காலங்களில் பொழிந்த மழை நீர் தெருக்களில் தேங்கியது. மழை நாள் கடந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் அப்பகுதியில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளதாகவும், பல்வேறு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். 

 

இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மங்களூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் அங்கனூர் ஊராட்சி உள்பட அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் கடந்த ஒரு வருட காலமாக எவ்வித நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்காததால் அவ்வப்போது பொழியும் மழையாலும், எப்போதும் தேங்கி நிற்கும் கழிவு நீராலும் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகினர். நிம்மதியாக உறங்க கூட முடியாத நிலை.

 

இதனால் விரக்தியடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து இரவு நேரங்களில் சாக்கடை நீரை தமது வீடுகளிலிருந்து கொண்டு வந்த  பாத்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

 

"தற்போது கரோனா பிரச்சனையில் போராடி வரும் பொதுமக்களுக்கு மேலும் இந்த சாக்கடையால் தொற்றுநோய் ஏற்பட்டு விடுமோ என்ற மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளதால் தாங்களே அகற்றியதாகவும், இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட  சாக்கடை நீரை அங்கிருந்து, சாலையை கடந்து வெளியேற்ற  அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு அல்லது திட்டக்குடி வட்டாட்சியர் அவர்கள் முன்பு  தீக்குளிப்போம்" என்று எச்சரித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்