
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பாக ஒவ்வொரு தொகுதியிலும், வெகுநாட்களாக நிறைவேற்றப்படாத மக்கள் கோரிக்கைகளில் பத்து கோரிக்கைகளை தேர்வு செய்து அந்தத்தந்தத் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க சொல்லி உத்தரவிட்டார். அதன்படி, எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் உள்ள கோரிக்கைகளை ஆட்சியர்களிடம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் நீண்ட நெடு நாட்களாக நிலுவையில் உள்ள 10 கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கினார் அத்தொகுதி எம்.எல்.ஏ சங்கர். அதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்தமாக இடம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும். திருவொற்றியூரில் இயங்கி வரும் நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகங்கள் அனைத்தும் வாடகை கட்டமாகவே உள்ளன. இதை அனைத்தையும் ஒருங்கிணைந்த அரசு வளாகமாக அமைக்க வேண்டும்.
அதிநவீன வசதிகளுடன் திருவொற்றியூர் எண்ணூர் மணலி பேருந்து நிலையங்கள் புதுப்பித்து தர வேண்டும். பக்கிங்காம் கால்வாய் கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி, எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டும். நீண்ட காலமாக வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு இலவச பட்டா வழங்க வேண்டும்.
திருவொற்றியூர் மேற்கு பகுதி, எண்ணூர், மணலி, சின்னசேக்காடு ஆகிய இடங்களில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவந்து நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திருவொற்றியூர் மணலி இணைப்பு கால்வாய் மேம்பாலம் மற்றும் ஜோதிநகர் சடையங்குப்பம் மேம்பாலம் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அதிநவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும். எண்ணூர் பெரியக்குப்பத்தில் மின் எரியூட்டு மைதானம், மாட்டுமந்தை அருகில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கபடஸ்தான், அதன் அருகில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு கல்லறைக்கான இடம்.
பாரதியார் நகர் முதல் சின்னக்குப்பம் வரை கடல் அரிப்பை தடுக்க புதிய தூண்டில் வளைவுகள் மற்றும் டோல்கேட் முதல் பாரதியார் நகர் வரை பராமரிப்பு இல்லாமல் உள்ள தூண்டில் வளைவுகள் அமைத்துதர வேண்டும் என்றும் தொகுதியின் வளர்ச்சிக்கும் - மக்களுக்கும் தேவையான 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதியிடம் வழங்கினார்.
இதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நிச்சியமாக இதற்கான அனைத்து பணியினையும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திருவொற்றியூர் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.