தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் 'டிக் டாக்' செயலியை அரசு தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, பதில் அளித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசால் தான் செய்ய முடியும். தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடை செய்யப்படும் என்று கூறினார். 'டிக் டாக்' செயலியால் தவறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'டிக் டாக்' செயலியை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22- ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் அமைச்சர் மணிகண்டன் கூறினார். இருப்பினும் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் 'டிக் டாக்' செயலியால் நாள்தோறும் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். எனவே கண்டிப்பாக தமிழகத்தில் 'டிக் டாக்' செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.