Skip to main content

’பாமக எப்போதும் யார் முதுகிலும் குத்தியது கிடையாது’ - ராமதாஸ் பேச்சு! 

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

அதிமுக பாமக கூட்டணி சேர்ந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்  புதுச்சேரியிலுள்ள  தனியார் திருமண மண்டபத்தில்  இன்று நடைபெற்றது.   பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,  பா.ம.க தலைவர் ஜி.கே.மணி,  பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்,  பொருளாளர்  கவிஞர் திலகபாமா  மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

p

 

அப்போது பேசிய  இராமதாஸ், "  தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாமக உள்ளது. பிற கட்சிகள் நம்மை கூட்டணிக்கு அழைக்க காரணம் கட்சியினரின் கடுமையான உழைப்பே காரணம்.   அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கவிற்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளதை பார்த்து பலரும் வயிறு எரிகிறார்கள்.    10 தொகுதி கேட்கக் கூடிய தகுதிபெற்றவர்கள் நாங்கள். தொண்டர்கள் உற்சாகப் படுத்துவதை பார்க்கும்போது சரியான கூட்டணியைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என தோன்றுகிறது.

 

p

 

பாமக எப்போதும் யார் முதுகிலும் குத்தியது கிடையாது. யார் காலையும் வாரியதும் கிடையாது. கூட்டணி தர்மத்தை நிலைநாட்டக்கூடிய கட்சி பாமக.

 

ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியமான  10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. 

 

p

 

கட்சியினர் எண்ணத்தின்படியே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணிக்காக  எந்த காலத்திலும் பாமக தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது.

 

கோவை பொதுக்குழுவில் கட்சியினர் எனக்கு கொடுத்த அதிகாரத்தை சரியாகவே செய்து இருக்கிறேன்.  கூட்டணி வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.   அதிமுக, பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் நமது கட்சியின் கொள்கைகளை விட்டு கொடுக்க மாட்டோம். மேலும் கூட்டணி சமயத்தில் நாணல் போல் வளைந்தாலும், கொள்கை மாறாமல் இருந்து வருகிறோம். 

 

p

 

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் அதிமுக - பாமக கூட்டணி வெற்றி பெறுவதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.    நமது கட்சியினர் கண்ணியம் தவறாமல் இருக்க வேண்டும் என்பது  அன்புமணியின் கட்டளை.  நமது கட்சி கூட்டணியுடன் நாற்பதும் நமதே"  என்றார்.

சார்ந்த செய்திகள்