வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டார்கள் என்கிற தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்ட ஆட்சியர், அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவத்துறை டீனிடம் விளக்கம் கேட்டுள்ளனர். வேலூரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பேசுபொருளானது.
இந்நிலையில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் சிகிச்சை பெற வந்த 8 நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தாம்பரம் அரசு மருத்துவமனையில் பாதிப்பு அதிகரித்தால் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவர். ஆனால் தற்பொழுது அங்கும் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகக் கூறி 8 நோயாளிகளை அனுமதிக்க மறுத்துள்ளனர். தற்பொழுது அனுமதி மறுக்கப்பட்ட 8 நோயாளிகளும் மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாததால் மூச்சுத் திணறலுடன் ஆம்புலன்ஸ்காகக் காத்திருக்கின்றனர். அதேபோல் செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் 30 நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நோயாளிகள் முதலுதவி மட்டும் செய்துகொண்டு வேறுசில மருத்துவமனைகளுக்குச் சென்றுவிட்டனர்.
இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் வேகன்கள் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் ஏற்கனவே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "அவசரத் தேவைகளின் போது அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான். மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்குத் திருப்பி விடப்படுகின்றன" என்று கூறினார். இருப்பினும் மத்திய அரசின் இந்தச் செயல் மாநில அரசிற்கு அதிருப்தியைத் தந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.