திருத்தணி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி +2 படித்து வந்தார். நேற்று (25/07/2022) காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய மாணவி, உடன் இருந்த மாணவர்கள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இன்று (26/07/2022) காலை 08.00 மணியளவில் பள்ளி மாணவியின் உடற்கூராய்வு, அவரது அண்ணன் சரவணன் முன்னிலையில் தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனை டீன் அரசி தலைமையில் நாராயணபாபு, பிரபு, வைரமாலா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு உடற்கூராய்வைச் செய்து வருகிறது. மேலும், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும் உடன் உள்ளனர். உடற்கூராய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
உடற்கூராய்வு முடிந்த பின்னர், பள்ளி மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மாணவி உடல் சொந்த ஊரான தெக்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதனிடையே, மாணவியின் உடற்கூராய்வு நடப்பதையொட்டி, அரசு மருத்துவமனையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், சம்மந்தப்பட்ட பள்ளிக்கும், விடுதிக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.