Skip to main content

திருப்பூர் வெடிவிபத்து சம்பவம்; பலி எண்ணிக்கை உயர்வு!

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
tirupur dt pandian nagar karthik house incident

திருப்பூரை அடுத்துள்ள பாண்டியன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஏராளமான நாட்டு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இவரது வீட்டில் நேற்று (08.10.2024) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 9 மாத குழந்தையான அலியா செரின், விஜயா என்ற பெண், குமார் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதோடு இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 10 வீடுகள் சேதமடைந்தன. இது தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விபத்திற்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளே காரணம் எனத் தெரியவந்தது. மேலும் கார்த்திக் வீட்டில் இருந்த சுமார் 50 கிலோ வெடி மருந்தைப் பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பாக அதனை அங்கிருந்து அகற்றினர். அதே சமயம் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர்.

tirupur dt pandian nagar karthik house incident

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பட்டாசு தயாரிப்பு உரிமத்தை ஈரோட்டில் வைத்துள்ள சரவணகுமார் என்பவர், அவரது உறவினரான கார்த்திக்கின் வீட்டில் வைத்து கோயில் விழாவுக்குச் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் இந்த வெடி விபத்து தொடர்பாக 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து இந்த வெடிவிபத்து ஏற்பட்டது தொடர்பாகத் திருமுருகன் பூண்டி போலீசார் வெடிபொருள் சட்டம் பிரிவு 3இன் படி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி தியா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பூரில் நாட்டு வெடிகள் வெடித்த விபத்தில் சிக்கி இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்