திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஒரு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருபவர் 22 வயதான ரோஷன்குமார். ஜனவரி 8 ந்தேதி மதியம் தனது வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது, வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இளைஞர் மீது மோதியது.
மோதிய வேகத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மோதிய அந்த சொகுசு கார் நிற்காமல் வேகமாக சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் கத்தியும் கார் நிற்கவில்லை. உடனே அங்கிருந்த இளைஞர்கள் விடாமல் இருசக்கர வாகனத்தில் காரை துரத்தி சென்று நெக்குந்தி சுங்கச்சாவடியில் மடக்கினர்.
காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் இறந்துபோன ரோஷன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் சென்னையை சேர்ந்த கிரானைட் தொழிலதிபருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. கார் ஓட்டி வந்தவர், காரில் இருந்தவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சுங்கசாவடி சி.சி.டி.வி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.