திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து இலங்கை யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு ஜெர்மனியிலிருந்து நேற்று அதிகாலை பெங்களூர் திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் பெங்களூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, சென்னையிலிருந்து 10க்கும் மேற்பட்ட போலீசார் பெங்களூர் சென்று திருமுருகன் காந்தியை நேற்றிரவு சென்னை அழைத்துவந்தனர்.
தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக மே 17 இயக்கத்தினர் தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
கைது செய்த திருமுருகன் காந்தியை போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்த நீதிபதி, தேவைப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் அவரை போலீஸ் விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து இலங்கை யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.