Skip to main content

கூட்டுறவு சங்கத்தில் கோடிகணக்கில் முறைகேடு! அ.தி.மு.க. நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

tiruchirappalli



திருச்சி தில்லைநகர் என்பது திருச்சியில் மிகவும் வசதிபடைத்தவர்களுக்கு என்று உருவாக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் சொந்தமாக இடம் வாங்குவது என்பது தற்போது யாராலும் அவ்வளவு எளிதில் இடம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால், சதுர அடி 2,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மறுநாளே, 3.30 கோடி ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது. இதையடுத்து, சங்கத்தின் செயலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு தற்போது அந்த தில்லைநகர் கூட்டுறவு சங்கததின் அ.தி.மு.க. நிர்வாககுழு கலைக்கப்பட்டுள்ளது. 

 

தில்லைநகர் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக்குழு, 6 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றனர். குழுவின் தலைவராக, அ.தி.மு.க.,பாலக்கரை பகுதி செயலர், கலீலுர் ரகுமான் உள்ளார். நிர்வாகக் குழுவின் கூட்டம், கடந் அக்டோபர் மாதம் நடைபெற்றது. 
 

இந்த கூட்டத்தில், கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில், தில்லைநகர் பேரன்ட் காலனியில் உள்ள, 6,750 சதுர அடி நிலத்தை, விக்னேஸ்வரி என்பவருக்கும், தென்னூர் அண்ணாநகரில் உள்ள, 2,790 சதுர அடி நிலத்தை, ஹக்கீம் என்பவருக்கும் உரிமை மாற்றம் செய்து தர, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 

இதற்காக, விக்னேஸ்வரியிடம், 2,990 ரூபாயும், ஹக்கீமிடம், 3,069 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் படி, அந்த இடத்தை, கூட்டுறவு சங்கத்தின் செயலர், வேலாயுதம் என்பவர், இருவருக்கும், அக்டோபர்., 3ல் உரிமை மாற்றம் செய்து கொடுத்துள்ளார்.
 

இதில் விக்னேஸ்வரி, 3ம் தேதி, 2,990 ரூபாய்க்கு வாங்கிய இடத்தை, அடுத்த நாள், 4ம் தேதியே, பிரவீண் என்பவருக்கு, 3.30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
 

திருச்சி, தில்லைநகரைப் பொறுத்தவரை, 1 சதுர அடி நிலத்தின் விலை, குறைந்தபட்சமே, 10 ஆயிரத்துக்கு மேல். ஆனால், இந்த உரிமை மாற்றம் மூலம், சதுர அடி, 50 காசுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதேபோல் தான், தென்னூரிலும் நிலத்தின் மதிப்பு உள்ளது. ஆனால், வெறும், 2,990 ரூபாய்க்கு, 6,750 சதுர அடி நிலத்தையும், 3,069 ரூபாய்க்கு, 2,790 சதுர அடி நிலத்தையும் விற்று, கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது. 
 

கூட்டுறவு சங்கத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட காரணம், நிர்வாகக்குழுவின் தலைவர் கலீலுர் ரகுமானுக்கு பெருமளவு பணம் மாறியிருக்கிறது என வீட்டுவசதித் துறை விசாரணையில் இறங்கியதில், அரசு வழிகாட்டு மதிப்புப்படி, இந்த இரு விற்பனையிலும், 56 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. 
 

சந்தை மதிப்புப்படி பார்த்தால், 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.முதல் கட்டமாக, இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த, கூட்டுறவு சங்கத்தின் செயலர் வேலாயுதத்தை, 'சஸ்பெண்ட்' செய்து, கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த விற்பனை மூலம், நிர்வாகக்குழுவினர் எவ்வளவு ஆதாயம் அடைந்தனர், அரசுக்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்து விசாரிக்க, குழு அமைக்கப்படவுள்ளது. 
 

ஏற்கனவே, சங்கத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விசாரணைக் குழுவை அமைக்க முடியவில்லை.'அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும், குழு அமைத்து விசாரணை துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'அப்படி ஊழல் நடந்தது உறுதி ஆகும் பட்சத்தில், நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு, இந்த முறைகேடான விற்பனையில் ஆதாயம் அடைந்தவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்; பத்திரப்பதிவும் ரத்து செய்யப்படும்' எனவும், அதிகாரிகள் கூறினர்.
 

பலன் அடைந்த திருச்சி தொழில் அதிபர்கள் ! 
 

புறந்தள்ளப்பட்ட விதிகள்: திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை, ஏற்கனவே வாங்கியவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை மாற்றம் செய்து தர வேண்டும் என்பது விதி. அதேபோல், சங்கத்தில் நீண்டகால உறுப்பினர்களுக்கே, உரிமை மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லாம் மீறி வழக்கமாக அந்த சங்கத்தில் விதிகளை எல்லாம் மீறி இந்த உரிமை மாற்றம் நடந்துள்ளது. இடத்தை வாங்கியது, திருச்சியில் செயல்படும், 'மங்கள் அண்ட் மங்கள்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஹக்கீம் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பதால், அமைச்சர் வெல்லமண்டி நடராஜிடம் தஞ்சம் அடைந்தால் அவர் இந்த பிரச்சனையை சரி பண்ண முயற்சி செய்தனர். ஆனால் நிலத்தை வாங்கின தொழில் அதிபர்களோ அந்த நிலத்தை கூட திரும்ப ஒப்படைக்கிறேன். வாங்கின பணத்தை கொடுங்கள் என்கிற பேரம் நடந்து வந்தது. இதற்கு அடுத்தக்கட்டமாக சமீபத்தில் அமைச்சரின் இல்ல விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடியுடன் கூட இது பற்றி பேசியிருக்கிறார்கள். 
 

ஆனால் அதிகாரிகள் விசாரணையில் இதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் பல கோடி ரூபாய் இழப்புக்கு காரணமான நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது எனக் கேட்டு, நிர்வாகக் குழு தலைவர், கலீலுர் ரகுமான் உட்பட, 11 பேருக்கு விளக்கம் கேட்டு, டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதில் அளிக்காமல் தனக்கு நெருக்கமான அமைச்சரை வைத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான வேலையில் இறங்கினார்கள். 
 

இந்நிலையில், பதிவுத் துறையின் பதிவாளர் வில்வசேகர், தில்லை நகர் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து, 8 ம் தேதி உத்தரவிட்டுள்ளானர். அடுத்தகட்டமாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஓரு ஊழல் குற்றச்சாட்டில் அ.தி.மு.க. கட்சியின் பகுதி செயலாளர் தலைமையிலான நிர்வாக கமிட்டி ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்