முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் படுகொலையில் நெல்லை காவல்துறையின் தற்பொழுதைய நம்பிக்கையான சைபர் கிரைமின் வழிக்காட்டுதலால் தென்காசியை குறிவைத்துள்ளது மேயர் கொலையினை விசாரித்து வரும் தனிப்படைகள்.
கடந்த 23ந் தேதி மதியப் பொழுதில் நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆரம்பத்தில் ஆதாயக் கொலை தான் என கதைவிட்ட காவல்துறை சொத்திற்காக இந்தப் படுகொலைகள் நடந்திருக்கலாமென கொலையுண்ட உமா மகேஸ்வரியின் நெருங்கிய உறவினரான மூலிகுளத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகரையும், உட்கட்சி விவகாரத்தில் நடந்திருக்கலாமென சங்கரன்கோவில் அருகிலுள்ள பெண் பிரமுகரையும் விசாரித்து சுவற்றில் அடித்தப் பந்தாய், ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்காமல் திணறிய தனிப்படைக்கு ஆறுதலாய் அமைந்தது என்னவோ சைபர் கிரைம் போலீசாரின் சமீபத்திய செயல்பாடுகளே.
" கொலை சம்பவத்திற்கு முந்தைய தினத்திலிருந்து, கொலையான தினத்திற்கு மறுதினம் வரை ரெட்டியப்பட்டி, பொறியியற் கல்லூரி, மேலப்பாளையம் உள்ளிட்ட செல்போன் டவர் சிக்னலை ஆராய்ந்து வந்தோம்.
அன்றைய தினங்களில் மட்டும் அந்த டவர்களைப் பயன்படுத்தி வெளி நாட்டிலிருந்து, வெளி மாநிலத்திலிருந்து என ஏறக்குறைய லட்சத்திற்கும் அதிகமான பல அழைப்புக்கள் அப்பகுதிக்கு வந்துள்ளது. அதனை வடிக்கட்டி ஒவ்வொன்றாக ஆராய தென்காசி பகுதியிலிருந்து பல அழைப்புக்கள் இங்கு வந்துள்ளது. அது ஏன்.? இந்த கொலைக்கு சம்பந்தமாக இருக்காது எனும் நம்பிக்கையில் ஆராய க்ளூ கிடைத்துள்ளது. அதனை காவல்துறை உயரதிகாரிக்கு தெரிவித்துள்ளோம். இப்பொழுது தென்காசி காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது." என்கின்றார் சைபர் கிரைம் டீமின் அதிகாரி ஒருவர். இதனால் புதிய பரப்பரப்புத் தொற்றியுள்ளது.