Skip to main content

’’ஆறுதல்கூட சொல்லாத  மோடியின் மவுனம் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது’’ - திருமாவளவன்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
ti


முழு அடைப்பு வெற்றி! ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன்.

இது குறித்த அவரது அறிக்கை:’’ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், செயலற்ற எடப்பாடி அரசு பதவி விலகக்கோரியும் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது. ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

 

தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு செயலிழந்துபோய் கிடக்கிறது. அதை பொம்மையாக வைத்துக்கொண்டு மோடி அரசுதான் உண்மையான ஆட்சியை நடத்துகிறது. ஸ்டெர்லைட்டை நடத்திவரும் ‘வேதாந்தா குழுமம்’ பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் மிக நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனமாகும்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பாஜக 15 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறது. அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம் 22.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறது.  அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி லண்டனுக்கு போனபோது அவரை வரவேற்று மிகப்பெரிய அளவில் விளம்பரங்களைச் செய்தது வேதாந்தா குழுமம் ஆகும். 

 

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கும் அதைத் தொடர்ந்து 3 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதற்கும் பின்னால்,மோடி அரசு தான் இருக்கிறது என்ற அய்யம் நமக்கு எழுகிறது. துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காதது மட்டுமின்றி அதில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் குடும்பத்திற்கு ஆறுதல்கூட சொல்லாத பிரதமர் மோடியின் மவுனம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. 

 

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தற்காலிகமாக உயர்நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. எடப்பாடி அரசும் மின்சாரத்தை நிறுத்தியுள்ளது. ஆனால் இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகள் போதாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகிறோம் என தமிழக அரசும், மத்திய அரசும் அறிவிக்கவேண்டும். அப்பாவி மக்களை படுகொலைச்செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவுசெய்து  விசாரணை நடத்தவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறோம். ’’
 

சார்ந்த செய்திகள்