சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பேரங்கியூர் பஸ் நிருத்தம் அருகில் ஒரு பாம்பு விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெரிச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன் சென்னையில் இருந்து தனது லாரியில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரி பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே கடந்து சென்று கொண்டிருந்தது.
அதை பார்த்து லாரி டிரைவர் சுப்பிரமணியன் அந்த பாம்பின் மீது லாரி ஏறாமல் இருப்பதற்காக சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து லாரியில் இருந்த இரும்பு பொருட்கள் சாலையில் விழுந்து சிதறின. லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று இரும்பு பொருட்கள் மீது எரியுது. இதனால் பஸ் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சென்டர் மீடியனில் குறுக்கே கடந்து அந்தப்பக்கம் எதிர் வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது உரசி சோலார் மின்சார கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் ராமராஜ், கண்டக்டர் நீதி வழி பாண்டியன் ஆட்டோ டிரைவர் அறிவரசன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு பாம்பு குறுக்கே வந்து இப்படிப்பட்ட ஒரு பெரும் விபத்தை ஏற்படுத்தி மூவரை காயப்படுத்தியுள்ளது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாம்பினால் ஏற்பட்ட விபத்து மக்கள் மத்தியில் பெரும்பரபரப்பாக பேசப்படுகிறது.