திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல், வருடந்தோறும் ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திண்டுக்கல் மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் கோட்டை மாரியம்மன் வீதி உலா வருவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் கோட்டை மாரியம்மனின் வீதி உலா வந்து கொண்டிருக்கிறது.
இப்படி கோட்டை மாரியம்மன் வீதி உலா வரும்போது அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீரை ஊற்றி வரவேற்பதுடன் மட்டுமல்லாமல் தங்கள் வீடுகளின் முன் தேங்காய், பழம் வைத்து அபிஷேகமும் செய்கிறார்கள். அப்படிச் செய்யும் பொழுது பக்தர்கள் விருப்பப்படி பரிவட்டமும் கட்டுகிறார்கள். அதற்கு 50 ரூபாய்க்கான ரசீதும் கொடுக்கப்படுகிறது.
இருந்தாலும் உடன் வரும் பூசாரிகள், பக்தர்கள் அபிஷேக தட்டுக்கு காணிக்கை போடுங்கள் என்று கேட்கிறார்கள். காணிக்கை குறைவாக தரும் பக்தர்களுக்குக் கையில் கொஞ்சம் பூ கொடுக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான பக்தர்களுக்கு அது கூட கொடுப்பதில்லை. அதேசமயம், அதிக காணிக்கை தரும் பக்தர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்கிறார்கள் எனப் பக்தர்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அம்மன் வீதி உலா பெரும்பொழுது கோயில் சார்பாக உண்டியலும் கொண்டு வரப்படுகிறது. இதை ஊர்வலத்தில் உடன் வரும் அறங்காவலர் குழுவினரும் கண்டு கொள்வதில்லை என மக்கள் வேதனை அடைகின்றனர்.