/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_346.jpg)
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி கிராமத்தில் அடுப்பில்லா சமத்துவப் பொங்கல் எனும் நிகழ்ச்சி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குநர் வி.சேகர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘ஆண்டிக்கும் அரசனுக்கும் படியளக்கும் உழவன்’ எனும் தலைப்பில், உழவுத்தொழிலே உலகத்தின் முதன்மையான தொழில். இயற்கை விவசாயத்திற்கு திரும்பி, மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். தஞ்சை பாரத் கல்லூரி தாளாளர் புனிதா கணேசன், ‘வள்ளுவம் காட்டும் உழவுத்தொழில்’ எனும் தலைப்பில் வள்ளுவர் உழவுத்தொழிலைப்பற்றி உயர்வாக கூறியதை மேற்கோள் காட்டி கிராம மக்களிடையே உரையாற்றினார்.
பாரம்பரிய உணவுகளை அடுப்பில்லாமல் தயாரிக்கும் முறைகளைப் பற்றி அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர் தங்க சண்முக சுந்தரம் சிறப்புரையாற்றி பேசுகையில், “மாப்பிள்ளை சம்பா அவலை மூன்று மணி நேரம் ஊறவைத்து. நீரை முழுக்க வடிகட்டி பிழிந்து, பின்னர் உலர்த்தி, அதில் முதல் நாள் இரவே ஊறவைத்த வெல்லத்தில் தயாரான வெல்லப்பாகினை சேர்த்து, பின்னர் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, உலர் நார்தால் திராட்சை, பேரீச்சம் பழம், வறுத்த நிலக்கடலையை கல் உரலில் இடித்த தூள் முந்திரிப்பருப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பொங்கலை மண்பானையில் வழக்கம் போல செங்கற்கள் கொண்டு அடுப்பு மூட்டுவது போல, கற்களை வைத்து அதில் மண்பானைகளை அழகாக வரிசையாக வைத்து மண்பானைகளில் பச்சரிசி மாவு கோலமிட்டு மண்பானைக்கு குங்குமம், மஞ்சள் பொட்டு வைத்து மஞ்சள் கொத்துகளை மண்பானையில் கட்டி அலங்கரிக்கப்பட்டு அடுப்பில்லா பொங்கல் தயாரித்து இலையில் படையலிட்டு பஞ்சபூதங்களுக்கு வழிபாடு நடத்தி அடுப்பில்லா பொங்கல் வைத்து கொண்டாடலாம். இயற்கை உணவுகளை சாப்பிடும்போது இயல்பாக இரத்தம் ஓட்டம் அதிகரித்து, நலமாக இருக்கும். என்றும் பாரம்பரிய உணவுகளுக்கு மனித குலம் திரும்ப வேண்டும். நோயெதிர்ப்பு ஆற்றல் சக்தியை அதிகரிக்கவல்ல உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொண்டால் எந்தவித நோய் தொற்றை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை என்றார்” என்றார்.
மேலும், கையால் பிழிந்த எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி சாறு, மல்லித்தழை, புதினா தழை, ஏலக்காய் பொடி, இயற்கை விவசாயத்தில் தயாரான வெல்லத்தினை ஊறவைத்து பாகாக தயார் செய்து பானகம் ஆகியவற்றை தயார் செய்து வழங்கினார். கொய்யா பழம், அன்னாசிப்பழம், வாழைப்பழம், பேரீச்சம் பழம், நார்தால் உலர் திராட்சை, சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி, தேன் கலந்த தேனூறல் பழக்கலவை தயாரித்து வழங்கப்பட்டது.
முத்துலட்சுமி பிரைமரி நர்சரி பள்ளி தாளாளர் நா.தனபால், ‘உழவே தலை’ எனும் தலைப்பில் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் உழவுத் தொழில் சிறக்க உழவர்களுக்கு உதவிட சிறப்பு சலுகைகள் வழங்கி ஊக்குவித்திட வேண்டும் என்றார். வழக்கறிஞர் முத்துக்குமரன், உழவுத்தொழிலை மதிக்கவில்லை என்றால் விவசாயிகளின் சாபம் ஆட்சியாளர்களுக்கு பெரும் மீளமுடியாத துயரத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறி போராடும் உழவர்களின் உரிமையை பறிக்கக் கூடாது என்றும் அரசியலமைப்பு சட்டம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும் என்றார்.
மேலும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைப் பொதுச்செயலாளர் இராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட மகளிரணி தலைவி சோபனா பன்னீர்செல்வம் நிகழ்ச்சி ஏற்பாட்டினை உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் லெட்சுமிகாந்தன் மற்றும் மேலவரப்பன்குறிச்சி கிராம மக்கள் செய்திருந்தனர்.
முன்னதாக வரவேற்புரை முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் குரு கார்த்திகேயன் ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், மரபு வழி நோய் தொற்று பரவாமல் இருக்க தோரணங்கள் கட்டி உணவு தயாரித்து பொதுமக்களுக்கு பாரம்பரிய முறைப்படி உணவு தயாரிக்க உதவும் வகையில் 100 நபர்களுக்கு கல் உரல் வழங்கப்பட்டது. உழவனின் நிறமான பச்சையை நினைவூட்டும் விதமாக 100 பெண்களுக்கு பச்சை புடவை வழங்கி பச்சை புடவை அணிந்து கொண்டு அடுப்பில்லா சமத்துவப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஏர் பூட்டிய மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரும்பு ஊஞ்சல் கட்டி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நல்ல மழை பொழிய வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)