வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வரும் கஞ்சாவைப் பிடிக்கப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலிஸார் தீவிர சோதனையில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். அதனை மீறியும் தமிழ்நாட்டுக்குள் பல்வேறு வழிகளில் கஞ்சா வந்துகொண்டு தான் இருக்கின்றன.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதிக்கு ஒரிசா மாநிலத்தில் இருந்து சிலர் கஞ்சா கடத்தி வந்ததுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கே.வி.குப்பம் போலீசார் வடுகன்தாங்கல் ரயில்வே பாலம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மூன்று நபர்களைச் சோதனை செய்த போது அவர்கள் வைத்திருந்த பையில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகந்த் குமார் மாலிக்(25), சித்தாந்தாபகர்த்தி(19), சந்தரநகன்கர்(19) என்று தெரியவந்தது. இதனையடுத்து 28 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.
கஞ்சாவை இந்த மூன்று இளைஞர்களும் யாருக்காகக் கொண்டு வந்தார்கள் என கே.வி.குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கே.வி.குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.