மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் 5 பேர் பலியானதைக் குறிப்பிட்டு ‘மதுரை அரசு மருத்துவமனை டீனை கைது செய்! அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் பதவி விலக வேண்டும்!’ என மதுரையில் போஸ்டர் ஒட்டியிருக்கிறது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
‘மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் பலியானதற்கும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் பதவி விலக வேண்டும்?’மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜுவிடம் கேட்டோம்.
“மதுரைன்னாலே நாங்கதான்னு சொல்லிக்கிட்டிருக்காங்க செல்லூர் ராஜுவும் உதயகுமாரும். பெட்டிக்கடையைத் திறக்கிறதுன்னா கூட நாங்கதான் திறந்துவைப்போனும் பிடிவாதம் பிடிக்கிறாங்க. கலெக்டர் வந்து கார் கதவை திறக்கணும்; கூப்பிட்டதும் கமிஷனர் முன்னால வந்து நிற்கணும்னு எதற்கெடுத்தாலும் மதுரை மாவட்டத்துல இந்த ரெண்டு அமைச்சர்களோட அதிகாரம்தான். ஆனா.. மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் அநியாயமா பலியான விஷயத்துல இப்ப வரைக்கும் இவங்க வாய் திறக்கல. அதனாலதான், பதவி விலகச் சொல்லுறோம். அப்புறம் மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா இருக்காங்கள்ல. அவங்க என்னடான்னா,‘மதுரை ஜி.எச்.ல ஒரு நாளைக்கு 20 பேர்ல இருந்து 30 பேர் வரைக்கும் சாகுறாங்க. அந்த 30 பேர்ல இந்த 5 பேரும் அடக்கம். மின் தடைக்கும் நோயாளிகள் இறந்ததற்கும் சம்பந்தம் இல்ல’ன்னு பேட்டி கொடுக்கிறாங்க.
நாங்க போஸ்டர் ஒட்டினதும், எங்களுக்கு போனுக்கு மேல போன். எல்லாம் ஜி.எச். சரியில்ல. யாரும் இங்கே ஒழுங்கா வேலை பார்க்கலைன்னு. புகார் சொன்னவங்ககிட்ட விபரத்த வாங்கிட்டு, வக்கீலை அனுப்பி வச்சிருக்கோம்” என்றார்.
மதுரையில் மட்டுமல்ல. தமிழகத்தில் பல ஊர்களிலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உயிர்ப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.