கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகேயுள்ள அரிய கோஷ்டி கிராமத்தை சேர்ந்த சந்திரிக்கா( 24) என்ற பெண் தனது 4 மாத பெண் குழந்தை ஹரினிக்கு உடல்நிலை சரியில்லை என்று சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளியன்று வந்துள்ளார். மருத்துவரை பார்த்த பிறகு வீட்டுக்கு செல்வதற்கு சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு குழந்தையுடன் வந்துள்ளார். இயற்கை உபாதை கழிக்க பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் போது இவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன். நீங்க உள்ளே போய்ட்டு வா என்று அன்பாக பேசியுள்ளார்.
இதனை நம்பி கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். குழந்தை கிடைக்கவில்லை இதுதொடர்பாக சிதம்பரம் காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜ்யிடம் புகார் கொடுத்தார். உடனே காவல்துறையினர் பல இடங்களில் சிசிடிவி கேமரா உதவியுடன் குழந்தையை தேடிவந்தனர். இந்த நிலையில் குழந்தையை கடத்திய பெண் காவல்துறையினர் தேடுவதை அறிந்துகொண்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையின் முன்பு நின்றுகொண்டிருந்தவர்களிடம் குழந்தையை கொடுத்துவிட்டு பாத்ரூம் போய்ட்டு வருகிறேன் என்று கூறிசென்றுள்ளார். பின்னர் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகியும் அந்த பெண் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு புகார் அளித்தனர் அதன் பேரில் காவல்துறையினர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். குழந்தை திருடு போய் 2 மணி நேரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குழந்தையை மீட்டதற்கு அனைத்து தரப்பினரும் காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.