தேனி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ‘’ வருகின்ற ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக உங்களை தேடி வந்துள்ளேன். உங்களிடம் கலைஞர் மகனாக வாக்கு கேட்பதில் மகிழ்ச்சி, பெருமை, பூரிப்பு, புளகாங்கிதம் அடைகிறேன்.
தேனி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திராவிட இயக்கத்தின் வழி வந்த முத்தவரின் பிள்ளை, பாராட்டி போற்றி வந்த ஈரோட்டு பூகம்பமாக விளங்கிய தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரனாவார். அறிஞர் அண்ணாவின் பாசதம்பி கலைஞர் அவர்களின் உற்ற தோழன் சம்பத்தின் மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவார். சம்பத் சிறந்த பேச்சாளர், சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர்.
திராவிட இயக்கத்தில் ஒவ்வொருவருக்கம் ஒரு பாணி உண்டு. அண்ணாவிற்கு ஒரு பாணி, கலைஞருக்கு ஒரு பாணி, பேராசிரியருக்கு ஒரு பாணி என்று சம்பத் தனக்கென தனி பாணி வைத்திருந்தார். உலக வரலாற்றை அப்படியே கரைத்துக்குடித்து அதன் வாதங்களை டெல்லியில் எடுத்துரைத்து தி.மு.க. என்பது என்ன என்பதை எடுத்துக்காண்பித்தவர். தமிழக உரிமையை பெறுவதில் முன்னணியில் நின்று அண்ணாவை கவர்ந்தவர் சம்பத். இந்தியில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஆங்கிலம் தான் நீடித்து நிலைத்து நிற்கும் என்று நேருவிடம் பேசி அதற்காக பாடுபட்டவர் சம்பத்.
தந்தை பெரியாரின் குருகுலம் ஈரோட்டில் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு துணை நின்று பல காலங்களில் பணியாற்றிய சம்பத் அவர்களின் மகன் இளங்கோவன் தேனி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.
. இவருக்காக வாக்கு கேட்பதில் நான் பெருமைப்படுகிறேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நல்ல பேச்சாளர், தைரியமான பேச்சாளர், துணிச்சலாக எதையும் பேசுவார். இதனால் தனக்கு ஆபத்து வரும் என்றோ வழக்கு வரும் என்றோ கவலைப்பட மாட்டார். மனதில் பட்டதை பேசுவார், உங்களுக்காக எதையும் போராடி, வாதாடி பெறக்கூடிய ஆற்றல் படைத்தவர்.
மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வந்து அமர்வார். அவர் முலம் தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை பெற்றுத்தருவார். இவர் இன்னாருடைய பேரன், மகன் என்பதற்காக தொகுதி கிடைக்கவில்லை, இவருடைய தைரியம், போராட்டத்திற்காக தொகுதி கிடைத்துள்ளது. ஆனால் எதிரணியில் ஓபிஎஸ் மகனுக்கு தொகுதி மகன் என்ற தகுதி தவிர வேறு என்ன தகுதி உள்ளது. மர்மமான, சொல்லமுடியாத தகுதிகள் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் இங்கு சொல்ல முடியாது.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரது மகனுக்கு சீட் கிடைத்திருக்காது, போன தேர்தலில் ஓ.பி.எஸ் ஜெயலலிதா காலில் விழுந்து மன்றாடி என்க்கு சீட் தாருங்கள் என்று கேட்கும்போது சென்னையில் நில்லுங்கள் என்று கூறியதற்கு சென்னையில் தனது ஜம்பம் செல்லாது என்பதால் தனக்கு சென்னை வேண்டாம் என்றும் தேனி மாவட்டமே தாருங்கள் என்று வாங்கி வந்தவர் ஓ.பி.எஸ். என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
எடப்பாடி முதல்வராக அமர்ந்ததால் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்று ஓ.பி.எஸ் உடன் 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தவர்கள். அப்படிப்பட்டவர் துணை முதல்வராக உள்ளார். அவர் துணை முதல்வராக இருக்க முடியாது. தினகரன் சார்பு 18 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி முதல்வராக இருக்க கூடாது அவரை மாற்ற வேண்டம் என்று வாக்களித்தவர்கள். ஆனால் அதற்கான நடவடிக்கை இல்லை. அதே நேரம் 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிப்பு நடைபெற்றது. அதற்காக தினகரன் அணியினர் மேல்முறையீடு சென்றிருக்க வேண்டும், ஆனால் ஏனோ தெரியவில்லை அவர்கள் மேல்முறையீடு செல்லவில்லை.
ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி விட்டு சசிகலா முதலமைச்சராக இருப்பேன் என்று கூறியதால் அவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அந்த நேரத்தில் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இரண்டு பேர் உட்பட 4 பேர் மீது ஜெயில் தண்டனை உறுதியானது. ஜெயலலிததா உயிருடன் இல்லாததால் அவர் தவிர மற்ற 3 பேரம் சிறை செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரம் தான் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
சசிகலாவிற்கு பதிலாக தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று சசிகலா காலில் விழுந்து மண்புழு போல் தவழ்ந்து வந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார், ஆவியுடன் பேசினார், ஜெயலலிதா மர்மமாக மரணம் அடைந்துள்ளார் முறையான நீதி விசாரணை வேண்டும் என்றார். இது குறித்து பேட்டி, அறிக்கை ஆகியவை வெளியாகின. இது அனைவருக்கும் தெரியும், அப்படி தான் ஓ.பி.எஸ்.தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
மர்ம மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் கூட பேட்டி கொடுத்தார். திருப்பரங்கன்றம் தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போஸ் போட்டியிட்டார், தி.மு.க.சார்பில் டாக்டர் சரவணக்குமார் போட்டியிட்டார். போஸ் தன்னை எதிர்த்து வெற்றி பெற்றது செல்லாது என்று சரவணன் நீதிமன்றம் சென்றார். போஸ் போட்டியிடும் சின்னத்திற்காக ஜெயலலிதா கையெழுத்திட வேண்டும் என்ற சூழலில் ஜெயலலிதா உடல்நலம் குன்றியதோடு சுயநினைவும் இல்லாமல் இருந்ததால் அவரது கைரேகை செல்லாது என்று கூறியிருந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வந்த நீதிமன்ற தீர்ப்பில் போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஜெயலலிதாவை வைத்து தான் தினகரன் குடும்பத்தினர் சம்பாதித்தனர். ஓபிஎஸ்&ஈபிஎஸ் அணியினர் பல துறைகள் முலமாக ஓபிஎஸ், ராஜா, ரவிந்திரன் ஆகியோருடன் 7, 8 வருடங்கள் பல ஊழல்கள் செய்து பல கோடிகள் சுருட்டினர். கருர் அன்புநாதன் வீட்டில் பல கோடி ருபாய் மற்றும் தங்ககட்டிகள் எடுத்தனர், அதில் ஓபிஎஸ்ஸிற்கு தொடர்பு உண்டு என்று சொன்னார்கள். இது என்னவாயிற்று , சேகர்ரெட்டி வீட்டில் வருமான வரி ரெய்டு அதில் ஓபிஎஸ் குறித்து சேகர்ரெட்டி தனது டைரியில் கூறியுள்ளார். ஓபிஎஸ், நாகராஜ் என்பவருக்கு நெடுஞ்சாலைத்துறை செய்யாத்துறை என்ற காண்ட்ராக்டர் முலம் கூட்டணி சேர்த்து பல கோடி ஊழல் செய்து சம்பாதித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி பகுதியில் உள்ள அனைத்து தோப்புகள், பெரியகுளம் சோத்துப்பாறை பகுதியில் உள்ள ஏராளமான நிலங்கள், தேனியில் ஏராளமான சொத்துக்கள், போடி மலைப்பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்கள் பினாமிகளின் பெயர்களில், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் கிரானைட், ராக்கர் ஆர்ச் கான்ட்ராக்ட் , அன்னை இன்பா டெவலப்பர் சுப்பிரமணியம், அசோக்குமார், கலைச்செல்வி, இவர்கள் முலம் பல கோடி ஊழல் செய்து ஓபிஎஸ் சம்பாதித்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜெயலலிதா ஓ.பி.எஸ.ஸை அழைத்து அவரை மிரட்டி அச்சுறுத்தி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லப்பட்டி முருகன், சினிகந்தசாமி, ரமேஷ், சிவக்குமார் ஆகிவர்களையும் மிரட்டி பல கோடியினை பறித்தார்.
நெல்லை காண்ட்ராக்டர் தலைமறைவானார். இந்த பணம் அனைத்தையும் ஜெயலலிதா பிடுங்கி கொண்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸிடம் வாக்குமுலத்தினை பதிவு செய்து அதற்கான பென்டிரைவ், கம்ப்யூட்டர் அனைத்தையும் கொடநாடு கொண்டு சென்று வைத்து விட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கொடநாடு வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டார். கொடநாட்டில் இருந்த 2 ஆயிரம் கோடி பணம் மற்றும் ரிக்கார்டுகளை கைப்பற்ற திட்டமிட்ட ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் வாட்ச்மேன் கொலை என்று அதனை தொடந்து 5 கொலை செய்தனர். ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் டிரைவர் கனகராஜ் கொலை செய்வதற்காக கேரளாவிலிருந்து 13 பேர் கொண்ட கூலிப்படை நியமித்து வாட்ச்மேன் கொலை அதனை தொடர்ந்து 5 பேர் கொலை என்று செய்து விட்டு சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்தனர். திருடன் கூட சொந்த வீட்டில் கொள்ளையடிக்க மாட்டான். இது போன்று கொலை, கொள்ளையடித்தவர்கள் தற்போது தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள்.
மதுரையில் ஓபிஎஸ் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்கிறார். ஏற்கனவே தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த கூட்டணி என்கிறார். நான் கேட்கிறேன், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த உரிமையை மீட்டுள்ளீர்கள். தமிழகத்தை மத்தியில் மோடியிடம் அடகு வைத்துள்ளீர்கள் , அமீத்ஷாவிடம் அடகு வைத்துள்ளீர்கள், நிதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் பிப்ரவரி 8ந்தேதி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையினை படித்தார். அதில் தமிழகத்தின் உரிமைகளை வாங்க முடியவில்லை என்று கூறுகிறார்.
கஜாபுயல் நிதி முழுமையாக வரவில்லை என்கிறார். ஜி.எஸ்.டியில் தமிழகத்தின் பங்கு வரவில்லை என்கிறார். அதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளராக உள்ள தம்பித்துரை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி தராமல் இழுத்தடித்து வருகிறார்கள் என்றார். மோடி காவலாளி என்கிறார்கள், அவர் விஜய்மல்லையா, எடப்பாடி, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவலாளியாக உள்ளார். கொடநாடு குற்றவாளிகளுக்கு பாதுகாவலராக மோடி உள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது.
தமிழ்நாட்டில் கலைஞர் முதல்வராக இருந்து ஆட்சி புரிந்துள்ளார். அப்போது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முக்கையா எம்.எல்.ஏவாக இருந்தபோது பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரகாநதியில் மேற்கே 36 கோடி செலவில் சோத்துப்பாறை அணை, 6 கோடி செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், புதிய பேருந்து நிலையம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம், சருத்திபட்டி லெட்சுமிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், லெட்சுமிபுரம் கால்நடை மருந்தகம், தேனி புதிய பேருந்து நிலையம், தேனி, பெரியகுளம் உழவர்சந்தைகள், தேவதானப்பட்டி மருத்துவமனை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பாசன கால்வாய்கள், உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக ஆட்சி வந்தால் நியூட்ரினோ திட்டம் நிறுவ அனுமதிக்கமாட்டோம், முல்லைப்பெரியார் அணையில் 152 அடி நீர் , திண்டுக்கல், பெரியகுளம், தேனி கூடலூர் வரை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றுவோம், பெரியகுளத்தில் வவ்வால்துறை அணைக்கட்டு எருமலைநாயக்கன்பட்டி முத்துக்குளம் கண்மாய் தூர் வாருதல் திட்டச்சாலை பணிகள், புதிய அணைகள் கட்டுதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, பயிர்க்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு ஆகியவை நிறைவேற்றப்படும் என்றார்.
கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அவர் நிச்சயமாக பெரியகுளத்திற்ககு வாக்கு சேகரிக்க வந்திருப்பார். அவர் மறைந்து விட்டாலும் நம்மை விட்டு அகலவில்லை, நமது மனங்களில் உள்ளார். அவர் கூறும்போது சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பார் அவர் உள் இதயத்தை இரவலாக தா அண்ணா என்று கூறிய அண்ணாவின் சமாதி அருகில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். கலைஞர் என்னிடம் உற்சாகத்துடன் கூறும்போது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கூறுவார். அந்த வார்த்தைகளை முதலீடாக வைத்துக்கொண்டு உழைத்து வருகிறேன்.
அந்த உழைப்பிலிருந்து கிடைக்கும் வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பேன். எனவே தேனி நாடாளுமன்றம் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார் . அதன்பின் தேனி பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அதற்கு அடுத்தபடியாக ஆண்டிபட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்தும், திமுக வேட்பாளரான மகாராஜனை ஆதரித்து பேசி பொது மக்களிடம் ஓட்டு கேட்டு விட்டு மதுரைக்கு புறப்பட்டார்.