கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர்களும் தங்களுக்கு சொந்தமான கரும்பு வயலில் உடல் அழுகிய நிலையில் கண்டடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காடியார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(60). இவரது மனைவி அன்னபூரணி(52). இவர்களுக்கு சந்தோஷ்குமார், ராஜேஷ் குமார் என இரண்டு மகன்கள். இதில் ராஜேஷ் குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். சந்தோஷ் குமார் திருக்கோவிலூரில் உள்ள ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதோடு அவ்வப்போது தாய் தந்தையுடன் விவசாய வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
ராஜேஷ் குமார், பெங்களூரில் இருந்து தினசரி தனது தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரிடமும் செல்போனில் பேசுவார். அதன்படி சில தினங்களுக்கு முன்பு தாய், தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் யாரும் ஃபோனை எடுக்காததால் தனது சகோதரர் சந்தோஷ் குமாரை தொடர்புக்கொள்ள, அவரும் தொடர்பில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ்குமார், அதே பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு ஃபோன் மூலம் பேசி தனது குடும்பத்தினரிடம் பேசிவிட்டு தனக்கு தகவல் தருமாறு கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணனுக்கு காடியார் கிராமத்தில் ஒரு வீடும், திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு வீடும் உள்ளது. அவரது உறவினர்கள் அதன்படி காடியார் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கும் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், மீண்டும் காடியார் கிராமத்திற்கு வந்து ராதாகிருஷ்ணனனுக்கு சொந்தமான கரும்பு வயல் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கே சந்தோஷ் குமார் பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் கிடந்துள்ளது. அதேபோல் அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் கிடந்துள்ளன. மேலும் கரும்பு பயிருக்கு தெளிக்கும் தேவையான உரம், பூச்சி மருந்து ஆகியவை அங்கே சிதறி கிடந்துள்ளன. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கரும்பு வயலுக்கு உள்ளே சென்று தேடி பார்த்துள்ளனர். அங்கே ராதாகிருஷ்ணன், சந்தோஷ் குமார் ஆகியோர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும், சற்று தள்ளி அன்னபூரணி உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். மூவரும் கரும்புத் தோட்டத்தில் உடல் அழகிய நிலையில் கிடந்ததை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். டி.எஸ்.பி. மனோஜ் குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராதாகிருஷ்ணன் உட்பட மூவரும் கரும்பு வயலில் இறந்து கிடந்தது எப்படி, இது தற்கொலையா அல்லது முன் விரோதத்தில் அவர்கள் மூவரையும் யாராவது கொலை செய்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இறந்த சந்தோஷ் குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது அவரது மனைவி தன் குழந்தையோடு தனது தாய் வீட்டில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.