
கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். இந்த பெண்ணும், குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த 23 வயது நபரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு வேலை முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கம்மியம்பேட்டை பகுதியில் கட்டி முடிக்கப்படாத பழைய கட்டிடத்தில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் பெண்ணின் காதலன் வைத்திருந்த செல்போன், பணம் போன்றவற்றை பறித்து வைத்துக் கொண்டனர். அதில் ஒருவர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய, பின்னர் மூவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். 'இதை வெளியில் சொன்னால் உங்கள் வீடியோவை எல்லோருக்கும் அனுப்பி விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண்ணை காதலன், தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார். அந்த வழியாக காவல்துறையினர் வந்தபோது சந்தேகமடைந்து அந்த பெண்ணிடம் விசாரிக்க, இதுகுறித்து காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கடலூர் குப்பன்குளம் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் கிஷோர்(19), நாகப்பன் மகன் சதீஷ்(எ)சதீஷ்குமார்(19), புதுப்பாளையம் ஷாஜஹான் மகன் ஆரிப் என்கிற சையத் ஆரிப்(19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் இவர்கள் மூவரையும் ஓராண்டுகாலம் குண்டர் தடுப்புக் காவலில் சிறை வைக்க ஆணையிட்டார். அதன் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று வாலிபர்களும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.