கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று (01.12.2021) சென்றுகொண்டிருந்தது. ரெட்டிச்சாவடி அருகேயுள்ள பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், தனியார் பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநர் தேசிங்கை அவதூறாகப் பேசி கத்தியால் வெட்டினர். தடுக்கவந்த பேருந்து நடத்துனர் நவீன்குமாரையும் அவர்கள் வெட்டிவிட்டு, அவர் கையில் வைத்திருந்த பையில் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் நேற்று, தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் பிரித்வி (எ) பிரிதிவிராஜன் (22), கதிர்வேல் மகன் சீனிவாசன் (21), புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த வேம்பன் மகன் மருது (எ) மருதுநாயகம் (23) ஆகிய 3 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்கு அளித்த புகாரின் பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரித்வி, மருது ஆகியோர் மீது கடலூர், புதுச்சேரி பகுதி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் தற்போது, இருசக்கர வாகனத்துக்கு வழிவிடாத காரணத்தால் ஓட்டுநர், நடத்துனரைத் தாக்கியதும் தெரியவந்தது.
இதனிடையே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விடுத்துள்ள எச்சரிக்கையில், 'கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள நபர்கள் புதுச்சேரி மாநில ரவுடிகளுடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.