Skip to main content

“அரசியலில் சிவாஜியின் தோல்விக்கு எம்.ஜி.ஆர் தான் காரணம்!”- வாக்குறுதியால் வீழ்ந்தார் என்கிறார் இளங்கோவன்! 

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிவகாசியில் இன்று (13/11/2019) செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 

“தமிழக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து மிகவும் மோசமாகப் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் ஏற்பட்ட விபத்தினால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும். சிவாஜிக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம் எம்ஜிஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயன்றதால்தான். 
 

அதனால்தான், அந்தத் தேர்தலில் சரிவு ஏற்பட்டது. சிவாஜிகணேசன் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அவருடைய இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். பதவி பெரிதல்ல எம்ஜிஆர் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி தான் பெரிது என்று நினைத்ததால்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. சிவாஜி பற்றி பேசுவதை எடப்பாடிபழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். 

tamilnadu congress party evks elangovan press meet speech

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பார். அதிமுக நாங்குநேரியில் பெற்ற வெற்றி பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கியதால் தான். அதனால்தான், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு உள்ளூர் ஆட்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வெளியூர் வேட்பாளரைத் தேர்தல் நிறுத்தியது தான். அதுதான் தோல்விக்கான காரணம்.  
 

உள்ளாட்சித் தேர்தலை ஐந்து கட்டமாக நடத்துவது, ஐந்து கட்டத்திலும் ஊழல் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாராவதற்குத்தான். மக்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கவே இப்படி ஒரு கருத்து சொல்லப்படுகிறது. இது ஏற்கக் கூடியதல்ல. 
 

ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டார். ஒவ்வொரு படமும் வெளிவரும் போது இதுபோன்ற கருத்தை கூறி வருகிறார். ரஜினிக்கு அரசியலுக்கு வருவதற்கான தைரியம் இல்லை. கமலஹாசன் மிக அழகாக யாருக்கும் புரியாத மொழியில் பேசுகிறார். போகப்போக பார்ப்போம் என்ன செய்கிறாரென்று. 
 


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தொற்றுநோய் வைரஸ் காய்ச்சல் மூலமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை கண்டுகொள்வதே இல்லை. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை குறித்து .. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்றவாளிகளை மன்னித்து விட்டார்கள். நீதிமன்றம் தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.
 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் மலர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் விரைவில் அது மலரும். ஆனால்..  ஒருபோதும் தாமரை மலராது. முதல்வர் பத்து நாட்கள் வெளிநாடு சென்று வந்தார். அதனால் துணை முதல்வர் ஏழு நாட்கள் சென்றுள்ளார். துணை முதல்வர் பெயர் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது. காரணம் தேனி தொகுதியில் 350 கோடி கொடுத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்துள்ளார்கள். இதற்குத்தான் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.”என்றார் வழக்கம்போல் அதிரடியாக. 

 

சார்ந்த செய்திகள்