கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாகத் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மாவட்ட டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இது ஒரு வழக்கமான வதந்திதான் என விளக்கமளித்துள்ளார். பண்டிகை காலங்களில் இதுபோன்று பொய்யான மிரட்டல் வருவது வழக்கம்தான் என்று கூறிய அவர், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், இந்த மின்னஞ்சல் தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், மக்கள் அமைதியாகத் தீபாவளியைக் கொண்டாட அனைத்து விதமான நடவடிக்கைகளும் காவல்துறையினர் சார்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.