கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் தமிழ்நாடு அரசின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையத்திற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் விற்பனை செய்வதற்காக, நெல் மூட்டைகளைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சாக்கு பற்றாக்குறையினால், கடந்த ஒரு மாத காலமாக 20,000- க்கும் மேலான நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையினால், வயலூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த, சுமார் 3,000 நெல் மூட்டைகள் முற்றிலுமாக மழையில் நனைந்தும், மழை நீர் உட்புகுந்தும் சேதமாகியுள்ளது. இதனால் நெல்மணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதையும், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதையும், கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஒரு மாத காலமாக காத்துக் கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மறு முளைப்புத் தன்மை ஏற்பட்டும், எலிகளின் தொல்லையால் நெல்மணிகள் மண்ணோடு கலந்து எதற்கும் பயன்படாத வகையில் சேதமடைந்தும் உள்ள நிலையில், தற்போது மழையினால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டதாக வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் நிலைய அதிகாரிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தார் பாய்கள் தராமல் போனதாலும், சம தளமான அல்லது சிமெண்ட் தரை தளத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் அமைக்கப்படாமல் போனதாலும், இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உர விலை உயர்வு, வாகனக் கூலி, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு 20,000 முதல் 30,000 வரை செலவு செய்துள்ள நிலையில், தற்போது மூட்டை ஒன்று 900 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுவதால், தாங்கள் செய்த முதலீடு கூட எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் மழையில் நனைந்த நெல் மணிகளை கூலி ஆட்களைக் கொண்டு உலர்த்தும் பணியினை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை காரணம் காட்டி விலை குறைப்பைத் தவிர்க்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.