



மெட்ராஸ் ரோட்டரி சங்கம், மெட்ராஸ் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. செம்மொழிப் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவும் மருத்துவருமான எழிலன் கலந்துகொண்டு பயனாளிகளுக்குத் தடுப்பூசி போட்டு துவக்கி வைத்தார். இதில் மெட்ராஸ் ரோட்டரி சங்கத் தலைவர் பிரகாஷ், வருமானவரித் துறை இணை இயக்குநர் சங்கர் கணேஷ், நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஷாம் வில்சண்ட், திமுக பகுதிச் செயலாளர் அகஸ்டின்பாபு, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கப்பில், தாஸ் பாண்டியன், மருத்துவர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய எழிலன் எம்.எல்.ஏ. "நான் ஒரு மருத்துவர் என்பதாலும் பல கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவன் என்ற அனுபவத்தாலும் சமூக ஆர்வலரான உங்களுடன் இணைந்து களப்பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது இருக்கும் இந்த அவசர காலத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவதாலும் கைகளைக் கழுவுவதாலும் மட்டுமே கரோனாவை வீழ்த்திவிட முடியாது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கரோனா பரவலைத் தடுக்க முழுமையான வழியாகும். மேலும் கரோனாவின் பாதிப்பு உச்ச நிலைக்குச் சென்று உயிர்பலி ஏற்படுத்துவதை ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பூசி தடுத்துவிடுகிறது. எனவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சில நடிகர்கள், வி.ஐ.பி.கள் தடுப்பூசி போட்டதனால் இறந்துவிடுகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தில், சிலர் ஊசியை தவிர்த்துவருகின்றனர். இது முற்றிலும் தவறு. இங்கு உள்ள 90 விழுக்காடு நபர்கள் தடுப்பூசியைப் போட்டவர்கள்தான். எல்லோரும் நலமாக உள்ளனர். ஏதோ ஒரு சிலர் இறந்துவிட்டதால் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முக்கியமாக கரோனா மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்புள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது முக்கியமாக குழந்தைகளைத்தான் அதிகமாகப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதைத் தடுக்க வேண்டுமானால் முதலில் நாம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது குழந்தைகளுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும். நமக்காக இல்லையென்றாலும் நம்முடைய குழந்தைகளின் நலனுக்காகவாவது நாம் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்குமான அத்தியாவசியமான ஒன்று. இதை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இங்கு வந்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சென்னை ரோட்டரி சங்கத் தலைவர் பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.