சேலம் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி வாகனம் கீழே விழுந்ததில் நகை கொள்ளையர்களின் இருவரின் கால்களும் முறிந்தன. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி, இளம்பிள்ளை, தாரமங்கலம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து நடந்து செல்லும் பெண்களிடம் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்களைப் பிடிக்க இடைப்பாடி காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 31) மாலை, இடைப்பாடி - பூலாம்பட்டி சாலையில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தப்பிச் செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்த சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், பூலாம்பட்டி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் இருவரின் இடது கால்களும் முறிந்தன. அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (32), சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த மாரிமுத்து (39) ஆகியோர் என்பதும், இளம்பிள்ளை பகுதிகளில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த கனகா (56) என்பவரிடம் 2.50 பவுன், ருக்மணி (52) என்பவரிடம் 3 பவுன் நகைகளை பறித்துள்ளனர். இவ்விரு வழக்குகளிலும் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் சசிகுமார் கைது செய்துள்ளார்.
கொள்ளையன் மாரிமுத்து, சென்னையில் சில பொருள்களை பழங்கால பொருள்கள் எனக்கூறி லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று மோசடி செய்து வந்துள்ளார். அப்போதுதான் மற்றொரு கொள்ளையனான கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் மீது ஏற்கனவே சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் 20- க்கும் மேற்பட்ட நகைப்பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாரிமுத்து அழைப்பின் பேரில் கார்த்திக் சேலத்திற்கு வந்து கூட்டு சேர்ந்து நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சென்னையில் குற்ற வழக்குகளில் ஈடுபடுவோர் காவல்நிலைய கழிப்பறையில் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக்கொள்வது, தொடர்ந்து வந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வாகன விபத்தில் சிக்கி குற்றவாளிகள் கால்களை உடைத்துக் கொள்வது டிரெண்டு ஆகி உள்ளது.