தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிரம் உற்பத்திச் செய்யும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி, கடந்த 2018- ஆம் ஆண்டு மே 22- ஆம் தேதி நடந்த 100 வது நாள் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த ஆணையமானது, பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான இடைக்கால அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன். இந்த நிகழ்வின் போது தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உடனிருந்தார்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில், "வழக்கில் சிக்கி படிக்க, வேலைக்குச் செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவியை அரசு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெறுதல்" உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் கூறுகின்றன.