மைக்ரோ வட்டிக்கடன் தொல்லையால் கடன் பாரம் தாங்காமல் தென்காசி மாவட்டம் கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வாரம் ஆட்டோ டிரைவர் கந்தசாமி, தன் மனைவி இந்துமதி மகன் சின்னமுத்திரன் இவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டுத தானும் தற்கொலை செய்து கொண்டது மாநிலத்தையே பரபரப்பாக்கிய சூடு அடங்குவதற்குள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரும்பு வியாபாரி ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது மூன்று பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சாத்தான்குளத்தின் பிரண்டர் குளத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (33 வயது) இவரது மனைவி சிவசக்தி இவர்களுக்குப் பிரியதர்ஷினி (4 வயது) லாவண்யா (3 வயது) சக்திவேல் (2 வயது) மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சென்னையில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்த வெற்றிவேல் வியாபாரத்திற்காக ஆங்காங்கே அதிக வட்டியில் கடன் வாங்கியிருக்கிறாராம். குடும்பச் செலவு, மற்றும் வியாபார மந்தம் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட, கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். பாரம் தாங்காத வெற்றிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். தனது மனைவியிடம் அவளின் பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே தகராறு மூண்டுள்ளதாம். கோபமான மனைவி தன் மகன் சக்திவேலை மட்டும் அழைத்துக் கொண்டு செம்மண்குடியிருப்பிலுள்ள தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இதனால் மேலும் மனமுடைந்து மன அழுத்தம் அதிகமாகிப் போன வெற்றிவேல், நேற்று முன்தினம் (15.12.2019) மாலை தன் மகள்களான பிரியதர்ஷினி, லாவண்யா இருவருக்கும் விஷம் கலந்த உணவைக் கொடுத்து விட்டு தானும் சாப்பிட மூன்று பேர்களும் மயங்கியதுடன் உயிருக்குப் போராடியிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்கள் ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனைவி சிவசக்தியின் புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வறுமை, கடன், தொல்லை மனபாரம் தாங்க மாட்டாத தற்கொலைச் சம்பவங்கள் முயற்சிகள், தீவிரமாகத் தடுக்கப்பட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது.