மாவட்டத்திலுள்ள மக்களின் குறைகளை, இடர்பாடுகளை களைவதற்காக வாரக்கிழமைகளில் திங்கள் தோறும் குறை தீர்க்கும் நாளை நடத்தி வருகின்றது மாவட்ட நிர்வாகம். மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் குழுமியிருக்க ஆட்சியரிடம் மனுவினைப் பெற்று அதற்கு தீர்வு அளித்து வருவது தான் வாடிக்கையான ஒன்று. மாறாக அரசியல் கட்சிகளை சேர்ந்த எந்தவொரு எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் அங்கு தனியாக மனுவினை வாங்கக் கூடாது என்பது பொதுவான விதி.. இதற்கு மாறாக, " ஏன் அவர்கிட்ட மனுக் கொடுக்கனுமா என்ன..?" என ஆட்சியருக்குப் போட்டியாக, ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் இருந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுவாங்கியுள்ளார் ஆளுங்கட்சியினை சேர்ந்த எம்.எல்.ஏ.ஒருவர்.
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் அதிமுக சார்பில் விளாத்திக்குளத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் சின்னப்பன். இவர் திங்கள் குறைதீர்க்கும் நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சரியாக 11 மணிக்கு வந்தவர், நேராக மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலரின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பி.ஆர்.ஓ.வின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். பி.ஆர்.ஓ.சீனிவாசனும் அருகினில் அமர்ந்து கொள்ள விளாத்திக்குளம் தொகுதியிலிருந்து வந்த மக்களிடமிருந்து மனுக்கள் வாங்க தொடங்கினர். அருகிலிருந்த பி.ஆர்.ஓ-வும் எம்.எல்.ஏ.சின்னப்பன் மனுவாங்குவதை ஆட்சேபிக்கமால், அவரும் சேர்ந்து மனுக்களைப் பெற்றுக்கொள்ள தொடங்கினார். அதன்பின் கட்சி நிர்வாகிகளை வரவழைத்து அதே அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு வெளியேறினார் எம்.எல்.ஏ.சின்னப்பன். இவ்விவகாரம் வெளியில் கசிய கடுங்கோபத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தித்துறை தொடர்பு இயக்குநரை அழைத்து கண்டனங்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்களோ., " பொதுவாக திங்கள் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை ஆட்சியரே வாங்குவார். அவர் இல்லையெனில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் வாங்குவார். அவரும் இல்லையெனில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரோ அல்லது சமூகப்பாதுக்காப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியர் வாங்குவது வழமையான ஒன்று. மாறாக இங்கு எந்த அரசியல்வாதிகளும் மனுக்களைப் பெறுவதும் இல்லை. நாங்கள் அனுமதிப்பதும் இல்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வானவர் தன்னுடையத் தொகுதியில் தான் மனுக்களைப் பெற வேண்டும்,. இங்கு வந்து மனுக்களைப் பெற்றது கண்டிக்கத்தக்கது. அதைவிட வேதனை பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் அவருடைய இருக்கையை வழங்கியது. இதனைக் கண்டித்து விரைவில் போராட்டத்தை அறிவிக்கவுள்ளோம்." என்கின்றனர் அவர்கள். இது தெரிந்த எதிர்க்கட்சிகளும் இதனை சரிசெய்யாவிடில் நாங்களும் அங்கு வந்து மனுக்கள் வாங்குவோம்." என தெரிவிக்கவும் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.