மிகுந்த மதுபோதையில் தனது மகனை அரிவாளால் வெட்டி காயப்படுத்தியவனிடம், நியாயம் கேட்கச் சென்ற தந்தையும், மகனும் அதே இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல்துறை துணைச் சரகத்திற்குட்பட்ட பசுவந்தனை காவல் நிலையத்திற்குட்பட்டது தெற்கு பொம்மையாபுர கிராமம். இக்கிராமத்தினைச் சேர்ந்த கருப்பசாமியின் மூத்தமகனும், விவசாயக் கூலித் தொழிலாளியுமான காளிச்சாமி நேற்றிரவு மதுபோதையில் தள்ளாட்டமாக ஊருக்குள் வந்த நிலையில், அங்கேயிருந்த பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே மதுபோதையின் உச்சத்திலிருந்த பாலமுருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்குமிடையேயான வாக்குவாதம் முற்றி கைக்கலப்பான சூழலில் தான் வைத்திருந்த அரிவாளால் காளிச்சாமியைத் தாக்கி வெட்டினார். இச்சூழலில் அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விடவே, சிகிச்சைக்காக காளிச்சாமி பசுவந்தனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், "எதற்காக தனது மகன் தாக்கப்பட்டான்.?" என பாலமுருகனிடம் நியாயம் கேட்க காளிச்சாமியின் தந்தையும், தம்பியுமான மகாராஜன் அவனது வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். இதனால் கடுங்கோபமடைந்த பாலமுருகன் இருவரையும் வெட்டி வீசியுள்ளான். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த சூழலில் பாலமுருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணியாச்சி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.