
ம.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கிளைக் கழகம் முதல் மாநிலத் தலைமை வரையிலான பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் மதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை. வைகோ உள்ளிட்ட பலரும் பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து வைகோவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ வீட்டிற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 43 ஆயிரம் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களில் எல்லாம் ஒரு ஆதிதிராவிடர், ஒரு பெண் இருக்கும் வகையில் அறங்காவலர் குழு இருக்கும் வகையில் நியமிக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. அதனை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களையும் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.