கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து பாசணத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று (08/01/2021) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2020 - 2021ஆம் ஆண்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 11.1.2021 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஒரு தரப்பு விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமலும், கோரிக்கைகளைப் பரிசீலிக்காமலும் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.
வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம், குறிப்பிட்ட சிலருக்கு அழைப்புவிடுத்து விருத்தாசலத்தில் நடந்தது. இதில் புறக்கணிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தமிழக விவசாயிகள் கட்சித் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் விவசாயிகள், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் மரத்தில் இருந்து இறங்கி வர மறுத்ததால், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மரத்தில் ஏறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதிலும் உடன்பாடு ஏற்படாததால் திட்டக்குடி வட்டாட்சியர் சையது அபுதாகீர் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு விவசாயிகளை மரத்தில் இருந்து இறங்கி வரச் செய்தார். அதைத் தொடர்ந்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் திட்டக்குடி டி.எஸ்.பி மற்றும் விவசாயிகளுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.