Skip to main content

திருவாரூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
திருவாரூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு



தமிழகம் முழுவதும் ரூ. 300 கோடி செலவில் 2,065 ஏரிகள் விவசாயிகளின் ஆதரவுடன் தூர்வாரப்படவுள்ளன என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. திருவாரூரில் சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் படத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரூ.319 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்டடங்களை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது:

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. வேளாண்மை, ஆன்மீகம், தமிழ், கலை ஆகிய நான்கும் கலந்த ஒரு அழகு மாவட்டமாக திருவாரூர் திகழ்கிறது. திருவாரூர் தியாக ராஜர் கோயில் காலத்தால் கணக்கிட முடியாத பழம்பெருமை வாய்ந்தது. திருவாரூர் ஆழித்தேரை செப்பனிட்டு ஓடச் செய்தது ஜெயலலிதாவின் அரசு.

பசுவுக்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி நீதியைக் காத்த மனுநீதிச்சோழன் ஆண்ட மண் இந்த திருவாரூர் மண். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இந்த மண்ணில் பிறந்தவர்கள். தமிழ் ஓலைச்சுவடிகளை ஓடி ஓடி சேகரித்து தமிழ் இலக்கியங்களை உலகம் அறியச்செய்த 'தமிழ் தாத்தா' உ.வே. சாமிநாதய்யர் பிறந்த உத்தமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு மேலும் புகழ் சேர்க்கிறது. ஆங்கிலேயர்களுக்கே ஆங்கில புலமையைக் கற்றுத் தந்த சில்வர்டங் சீனிவாச சாஸ்திரிகள், பழம்பெரும் நாவலாசிரியர் எல்.ஆர்.விஸ்வநாத சர்மா, தமிழ்த்தென்றல் திரு.வி.க., இயக்குநர் பாலச்சந்தர் என இந்த மண்ணில் பிறந்த மாமனிதர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மாவட்டம் உழவர்களும், உழைப்பாளர்களும் நிறைந்த ஒரு விவசாய மாவட்டம் என்பதில்தான் பெருமை கொள்கிறது. திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியின் அளவு 8,52,925 டன்னாகும். இது மாநில உற்பத்தியில் 10.7 சதவிகிதமாகும். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றுதான் அடிப்படை தேவையாக கருதப்படுகிறது. அதில் முக்கிய தேவையாக உணவு உள்ளதால்தான் எம்.ஜி.ஆர் விவசாயத்தை, விவசாயிகளின் அருமைகளை தன் படங்களின் பாடல்கள் மூலம் எடுத்துக் கூறினார்.

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி' என்று விவசாயிகளை கடவுளின் குழந்தைகளாக மதித்தவர் எம்.ஜி.ஆர் விவசாயத் தொழிலாளியாக நடித்த கதாபாத்திரங்கள்தான் அவருக்கு அதிக செல்வாக்கைப் பெற்றுத்தந்தன. எம்.ஜி.ஆர் ஒரு நாட்டின் வெற்றி தோல்வியை விவசாயம் தான் தீர்மானிப்பதாக எண்ணினார். அதனாலேயே உழைக்கும் மக்களுக்கு ஒரு துன்பம் என்றால் முதலில் உதவிக்கரம் நீட்டுபவராக அவர் விளங்கினார். அந்த குணம்தான் அவரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது. அவரைப்பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருந்தால்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தான் முதல்வரான பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை வழங்கினார்.

காவிரி நதிநீர் பிரச்னைக்காக நீதிமன்றங்களில் வாதிட்டு, வெற்றியும் பெற்றார். ஜெயலலிதாவின் தொடர் முயற்சியால் 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது. ஜெயலலிதா டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்பினார். இதே திருவாரூரில் நடந்த ஒரு கூட்டத்தில் எந்தப் பின்னணியும் இல்லா மல் நான் இன்றைக்கு முதல்வராக இருக்கிறேன் என்றால், தமிழகத்தில் இருக்கின்ற மகளிர் எதையும் சாதிக்க முடியும் என்பதைத் தான் இது காட்டுகிறது என்று பெருமையுடன் கூறினார்.

அவரின் வழியில்தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரின் எண்ணப்படியே இந்த அரசு பதவியேற்று குறைந்த காலங்களிலேயே பல திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளது. மகசூல் பாதித்த 1,33,361 விவசாயிகளுக்கு ரூ.161.22 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கும் வகையில் நிகழாண்டில் ரூ. 5.92 கோடி செலவில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் 72 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 29.19 கோடியில் வையகளத்தூர் சாலை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 .99 கோடி மதிப்பில் 11,744 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் எண்ணங்களை, உழைப்பை உயர்த்தும் வகையில்தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டு அதிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து தங்களது வயல்களில் போட்டு பயன்பெற்றுள்ளனர். திட்டம் சிறப்பாக உள்ளது. என்று விவசாயிகள் கருத்து கூறியதால் ரூ. 300 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 2,065 ஏரிகள் தூர்வாரப்படவுள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை சேமித்து வைக்கும் வகையில் 7,879 கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ. 7,000 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி என்பது உன்னதமானது. இந்தியாவில் தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. இதனால் தான் 4 முறை இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

விவசாயத்தைப் போல் தமிழகம் கல்வியிலும் புரட்சி செய்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலியாக இருந்த 20,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பியதால் மாணவர்கள் கல்வி அறிவு பெற்று புரட்சி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் கல்வியில் 24.9 சதவீதம் வளர்ச்சிப் பெற்றுள்ளது. உயர்க் கல்வி படிப்பவர்களின் சதவீதம் 44.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டில் தமிழகத்தில் 65 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசு 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடியை அடிக்கடி சந்திக்கிறார் என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். அப்படி அவரை சந்தித்தால் தான் பிரதமர் ராமேஷ்வரம் வந்த போது தமிழகத்துக்கு எத்தனை லட்சம் வீடுகள் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினார். நெசவாளர்களுக்கு மின்கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு மீது தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து சாதனைப் படைத்து வருகிறது. மறைந்த ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் டெல்டா விவசாயத்துக்கு தண்ணீர் பெற்று கொடுக்க முடியாமல் போனது. இருப்பினும் மக்கள் எவ்வித பாதிப்பு அடையாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மறைந்த ஜெயலலிதாவின் அரசு விவசாயிகளின் அரசாக செயல்பட்டு வருகிறது.

மனுநீதிச் சோழன் நினைவாக திருவாரூரில் புதிதாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் எண்ணப்படியே நாங்களும் இந்த மாவட்டத்திற்கு வேண்டிய அத்தனை திட்டங்களையும் விரைந்து செயல்படுத்துவோம் என உறுதி கூறுகிறேன்.

வேளாண்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், மாணவர் விடுதி என ரூ. 37.74 கோடி மதிப்பில் 12 பணிகள் நிறைவு பெற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மக்கள் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தன் மகனுக்கு, சகோதரனுக்கு, தந்தைக்கு எடுக்கும் விழாவாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்றார் பழனிசாமி.

விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் ஆர். காமராஜ், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. கோபால், கு. பரசுராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் இரா. வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் நன்றி கூறினார்.

-செல்வகுமார்

சார்ந்த செய்திகள்