சிகாகோவில் நடைபெற்ற இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அங்கு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது, சிகாகோ Global Strategic Alliance Inc உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக, தமிழகத்தின் துணை முதல்வர் முன்னிலையில், Global Strategic Alliance Inc தலைவர் விஜயபிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப. ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும், சிகாகோவில் உள்ள மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ் சார்பில் தேனியில் ‘மூத்த குடிமகன்களுக்கு ஒரு மையம்’துவங்கப்படும் என்று அதன் நிறுவனர் சந்தோஷ்குமார் தெரிவித்தார். சிகாகோ நகரின் கூடைப்பந்து அணியின் சார்பில் தேனியில்‘கூடைப்பந்து அகாடமி’ அமைக்கப்படும் என்று அதன் பயிற்சியாளர் கென்ஸ்மேன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நெப்பர்வல்லி நகரின் மேயர் ஸ்டீவ் சிரிக்கோ‘நகரின் சாவி’ஒன்றை தமிழ்நாடு துணை முதலமைச்சரிடம் நினைவுப்பரிசாக வழங்கினார்.
தமிழ்நாட்டிலிருந்து வந்து இந்த நினைவுப்பரிசை முதன் முதலில் பெற்றவர் என்பதால் நன்றி தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், நெப்பர்வல்லி மேயருக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின் போது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் இந்திய- அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும், சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்குச் சென்று அங்கு செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை திட்டங்களுக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் துணை முதல்வர் விரிவான ஆலோசனை நடத்தினார்.