Skip to main content

ஆசிரியர் ஊசியால் குத்தியதால் மாணவன் இறந்தாரா? – பரபரக்கும் மலைவாழ் சங்கத்தினர் புகார்! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Thiruvannamalai school teacher on boy passed away case

 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் வட்டத்துக்கு உட்பட்டது அரசவெளி கிராமம். இந்தக் கிராமத்தில் அரசின் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், நூற்றுக்கும் அதிகமான மாணவ – மாணவிகள் பயில்கிறார்கள். விடுதியிலும் பல மாணவர்கள் தங்கி படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் நம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேவத்தான் என்பவரது மகன் சிவகாசி 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். கடந்த ஜூன் 30ஆம் தேதி மதியம் அந்த மாணவன் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்துள்ளார்.

 

இது தொடர்பாக சிவகாசியின் தந்தை சேவத்தான் ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் தந்துள்ள புகாரில், ஜூன் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஆசிரியர் மகாலட்சுமியின் மொபைல் எண்ணில் இருந்து போன் வந்தது. உங்கள் மகனின் முகம் வீங்கிப்போய் உள்ளது. வந்து அழைத்து போங்கள் எனச்சொன்னார். நாங்கள் சென்று பார்த்தபோது அவனின் முகம் வீங்கிப்போய் இருந்தது. அவன் பேசமுடியாத நிலையில் இருந்தான். மெல்ல பேசினான். அவனிடம் என்னாச்சி எனக் கேட்டபோது, முகத்தில் பரு இருந்தது, அதனை மகாலட்சுமி டீச்சர் ஊக்கால் குத்தினார் எனச்சொன்னான். அவனை அழைத்துவந்து நம்மியப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டினோம், அவர்கள் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். பாகாயத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் உடனே வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். அங்கு போன போது மருத்துவர்கள் செக் செய்துவிட்டு அவன் இறந்து விட்டதாக கூறினார்கள். பருவை ஊசியால் குத்தியதால் செப்டிக்காகி முகம் வீங்கியுள்ளது. ஆசிரியர் மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தந்துள்ளார்.

 

அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்காக பல கல்வி சேவைப் பணிகளை செய்வதன் மூலமாக பல விருதுகளை பெற்றவர். ஆசிரியர் மகாலட்சுமி மீது குற்றம்சாட்டுவதற்கு பின்னால் ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சேர்மனுமான அதிமுக பிரமுகரான வெள்ளையன் உள்ளார் என குற்றம்சாட்டுகிறார்கள்.


இது குறித்து சமூக வலைதளத்தில் மகாலட்சுமியின் நண்பர் ஒருவர் எழுதியுள்ள பதிவில், ‘தொலைக்காட்சி சேனல் வழங்கிய தொகையில் இருந்து 12 ஆயிரத்தை ஒரு மாணவனின் உயர் கல்விக்காக வழங்கியவர் மீதியிருந்த ஒரு லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் தந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரினார். அந்த தொகையோடு எஸ்.எஸ்.எஸ் திட்டத்தின்கீழ் 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தார். அந்த ஒப்பந்தத்தை எடுத்த முன்னாள் ஆட்சியின் கட்சி பிரமுகர் வேறு இடத்தில் கட்டினார். இது குறித்து ஆசிரியர் மகாலட்சுமி கேள்வி எழுப்பியதற்கு நேரடியாக பள்ளிக்கே வந்து உன்னை இடமாற்றுகிறேன். பள்ளியை பூட்டுகிறேன் என மிரட்டினார். அவர்கள்தான் இந்த விவகாரத்தை தூண்டிவிடுகிறார்கள். ஊர்க்காரர்கள், பிள்ளைகளிடம் மகாலட்சுமி தப்பு செய்தார் எனச்சொல்லுங்கள் என சொல்லச்சொன்னார். அவர்கள் மறுத்துவிட்டார்கள். காவல்துறை விசாரணையில் ஆசிரியர் மகாலட்சுமி மீது தவறில்லை என்பது உறுதியாகியுள்ளது’ என்கிறது அப்பதிவு.


அரசியல் பிரமுகர்கள் தூண்டிவிடுவதாகவே இருக்கட்டும், அந்த மாணவன் எப்படி இறந்தான்? அவன் விடுதியில் தங்கித்தானே படித்தான், அவனுக்கு உடலுக்கு முடியவில்லை, முகத்தில் கட்டி வந்திருக்கிறது என்றால் இதனை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது விடுதி காப்பாளர் கடமைதானே? இது பற்றி அவர் பெற்றோருக்கு தகவல் சொன்னாரா? பள்ளி தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். இதற்கு விடை தெரிய வேண்டாமா? ஆசிரியர் மகாலட்சுமி ஊசியல் குத்தினாரா இல்லையா? இறந்த மாணவனுக்கு வேறு நோய்கள் ஏதாவது இருந்ததா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தினால்தானே உண்மை தெரிய வரும். இது பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்கமாட்டேன் என்கிறார்கள். இறந்தது பழங்குடியின மாணவன் என்பதால்தானே அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். இறந்த சிறுவனின் உயிர் என்ன காக்கா, குருவியா? எனக்கேள்வி எழுப்புகிறார்கள் மலைவாழ் சங்கத்தினர்.


அரசு முழுமையான விசாரணை நடத்தவேண்டும், உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

 

சார்ந்த செய்திகள்