தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோயில், பிரசித்தி பெற்ற ஆலயமாக கருதப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பலருக்கும் நீலகண்டன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுப முகூர்த்த நாட்களில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான திருமணங்கள், காதணி விழாக்கள் நடக்கும். அரசியல்வாதிகள் கூட தங்கள் முதல் பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்கிய சம்பவங்களும் உண்டு. இந்தப் பகுதியிலிருந்து வெளியூர், வெளி மாநிலங்களில் குளிர்பான கடை வைத்திருப்பவர்கள் கூட நீவி கூல்டிரிங்ஸ் என்ற பெயரிலேயே கடை வைப்பார்கள்.
இப்படி பிரசித்தி பெற்ற ஆலயத்தில், கடந்த 28ஆம் தேதி கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாக குழுவினர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் 3 காணிக்கை உண்டியல்களைத் திறந்து காணிக்கை பணத்தை எண்ணியபோது அதில் ரூ. 5.86 லட்சம் பணம் இருந்தது. ஆனால், அடுத்த நாள் சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில், உண்டியல் பணம் எண்ணும்போது அந்தக் கோயில் அர்ச்சகர் ஒருவர் உண்டியல் பணத்தைத் தனது சட்டை பாக்கெட்டில் வைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவில் நிர்வாகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.