Skip to main content

பள்ளிகளின் பித்தலாட்டங்கள். – அதிகாரத்தை கண்டு மிரளும் கல்வித்துறை..?

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலமாக சமூக நலத்துறை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பிப்ரவரி 18ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து அந்த பேரணியை தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த சுமார் 1000 மாணவ - மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள பிரபல பள்ளிகளான டி.வி.எஸ் அகடாமி, தி பாத், விக்னேஷ், ஜீவாவேலு, எஸ்.கே.பி வனிதா, கெங்குசாமி, காந்திநகர், எஸ்.ஆர்.ஜீ.டி.எஸ் என பேரணியில் தனியார் பள்ளி மாணவிகள், மாணவர்கள் என அடுத்தடுத்து வந்தனர். கடைசியில் அரசு பள்ளி மாணவிகள் வந்தனர். பேரணியில் பெண் குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். இந்த பேரணியை பார்த்த சமூக ஆர்வலர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

 

thiruvannamalai school girls awareness rally

 

 

இதுபோன்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றால் பிரபலமாகவுள்ள டி.வி.எஸ் அகடாமி, தி பாத், விக்னேஷ் இன்டர்நேஷ்னல், ஜீவாவேலு, எஸ்.கே.பி வனிதா போன்ற பிரபல தனியார் பள்ளிகள் தங்களது மாணவ – மாணவிகளை பெரும்பாலும் அனுப்பாமல் ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழித்துவிடும். அதற்கு காரணம், தங்களது பள்ளியில் படிப்பவர்கள் எல்லாம் பணக்கார வசதியான வீட்டு பிள்ளைகள், இவர்கள் தெருவில் கோஷமிட்டபடி நடந்தால் தங்களது பள்ளியின் தரம் என்னவாவது என்கிற ஈகோ தனத்தால் அனுப்புவதில்லை என்ற கருத்து உள்ளது.

காந்திநகர் மேல்நிலைப்பள்ளி, வி.டி.எஸ் மேல்நிலைப்பள்ளி, டேனிஷ் பள்ளி, நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி போன்ற சில பள்ளிகள் தான் தொடர்ச்சியாக அரசின் விழிப்புணர்வு பேரணிகளுக்கு, நிகழ்ச்சிகளுக்கு மாணவ – மாணவிகளை அனுப்பும். அதனை வைத்து கல்வித்துறை, சமூக நலத்துறையினர் விழாவினை நடத்துவார்கள். அப்படிப்பட்ட நிலையில் தற்போது எப்படி பிரபலமான தனியார் பள்ளிகள் மாணவ – மாணவிகளை இந்த பேரணிக்கு அனுப்பியது என கேள்வி எழுந்தது.

இதுப்பற்றி கல்வித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் நாம் கேட்டபோது, 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ – மாணவியர் சேர்க்கையில் தற்போது தனியார் பள்ளிகள் தீவிரமாக உள்ளன. பல பிரபல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் பெற்றோர்களிடம் வாங்குகிறது. அதோடு, எங்க பள்ளிக்கு சமுதாயத்தில் நல்ல பெயருள்ளது, உங்க பசங்க இங்க படிக்க நன்கொடை தந்தால் தான் சேர்ப்போம் எனச்சொல்லி வாங்குகின்றன. நன்கொடைகளுக்கு பில் தருவதில்லை.

உதாரணமாக இந்தியாவின் பெரும் பணக்கார நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனம், டி.வி.எஸ் அகாடமி என்கிற பெயரில் திருவண்ணாமலையில் பள்ளி நடத்துகிறது. இந்த பள்ளியில் புதியதாக மாணவர் சேர்க்கைக்கு கல்வி கட்டணம் உட்பட பிற கட்டணம் இல்லாமல் நன்கொடை தரவேண்டும் என வெளிப்படையாக கேட்கிறது பள்ளி நிர்வாகம். இதுப்பற்றி அரசுக்கு புகார் சொன்னால் நாளை தமது பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என புகார் சொல்லாமல் அந்த பள்ளியை விரும்புகிறவர்கள் தங்களது பிள்ளையை சேர்க்கிறார்கள். அதுப்பற்றி தெரிந்தும் பெரிய பணக்காரரின் நிறுவனம் என்பதால் கல்வித்துறை அதிகாரிகள் அந்தப்பக்கமே போவதில்லை என கூறப்படுகிறது. இந்த பள்ளியை பார்த்து வேறு சில பிரபல பள்ளிகள் நேரடியாகவே நன்கொடை கேட்காமல், கல்வி கட்டணம் என்கிற பெயரில் லட்ச ரூபாய் வரை எல்.கே.ஜிக்கு வாங்குகின்றன.

நன்கொடை வாங்குவது, அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை விட அதிக கட்டணம் வாங்குவது, பேருந்துகளில், வேனில் அடைத்து வைத்து அழைத்து வந்தாலும், மாணவ – மாணவிகள் ஏற்றி வரும் வாகனங்கள் பரிசோதனையின் போது சிக்கல் வராமல் காத்துக்கொள்ளவும், மத்தியரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25 சதவித ஏழை குழந்தைகளுக்கு ஒவ்வொரு பள்ளியும் கல்வி கட்டணம் வாங்காமல் சேர்க்கை நடத்த வேண்டும் என்கிற விதியை கடைப்பிடிக்காமல் இருப்பதை கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணிக்கு பிரபல பள்ளிகள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளை அனுப்பிவைத்துள்ளார்கள் எனவும், மக்கள் நலனில் பள்ளிகளுக்கு எவ்வளவு அக்கறை பார் என மக்கள் பேசுவார்கள், அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இலவசமாக தங்களது பள்ளிக்கு விளம்பரம் கிடைப்பதால் அனுப்புகிறார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

மாணவ – மாணவியர் சேர்க்கை முடிந்ததும், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அதன்பின் அனுப்பமாட்டார்கள். மீண்டும் அடுத்தவருடம் மாணவ – மாணவியர் சேர்க்கை நடைபெறும் போது அனுப்புவார்கள் என்றார். 

இப்படிப்பட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் பிள்ளைகளுக்கு என்ன கற்றுதருவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்