திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள 20 கவுன்சிலர்களில் திமுக கூட்டணி 10 கவுன்சிலர்களையும், அதிமுக கூட்டணி 10 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது. இரு கூட்டணிகளும் சரிசமமாக கவுன்சிலர்களை பெற்றிருந்ததால் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை பிடிப்பதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வந்தது. இருதரப்பும் எதிர் அணிகளில் இருந்து கவுன்சிலர்களை இழுக்க முயற்சி செய்தது அது வெற்றி பெறாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் மார்ச் நான்காம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி அளவில் திமுக கூட்டணியை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் துரிஞ்சாபுரம் ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். ஆனால் திமுக கூட்டணியை சேர்ந்த கவுன்சிலர்கள் 10 பேர் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வரவில்லை. இதனால் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு துணை தலைவர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை 3 மணி அளவில் 11 கவுன்சிலர்கள் தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். தேர்தலில் திமுக சார்பில் கவுன்சிலர் உஷாராணி என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் மாலை 5 மணியளவில் வைஸ் சேர்மனாக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றுக்கொண்ட உஷா ராணி க்கு கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கடந்த இரண்டு முறையாக சேர்மன் மற்றும் துணைச் சேர்மன் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது, தற்போதும் சேர்மன் தேர்தல் நடக்காமல் துணைதலைவர் தேர்தல் மட்டும் நடந்துள்ளது. இதில் அதிமுக கூட்டணியை சேர்ந்த ஒருவர் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த வெற்றி திமுகவுக்குள் உள்ள உட்கட்சி சண்டையை வெளிச்சம்போட்டு காட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.