தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் 8 மையங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்த மையங்களில் ஆவின் பால் விற்பனையுடன் பால் பவுடர்கள் மற்றும் பால் உப பொருட்களும் பொதுமக்களுக்கு எப்போதும் தடையின்றி கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசன்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய 8 மையங்களில் ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
அம்பத்தூர் பால் பண்ணை கேட்டிலும், மாதவரம் பால் காலனியில் உள்ள ஆவின் இல்லத்திலும், அண்ணா நகர் குட்னெஸ் டவர் பார்க்கிலும், பெசன்ட் நகர் வண்ணாந்துறையிலும், அண்ணா நகர் கிழக்கு வசந்தம் காலனி, 18 வது மண்ரோட்டிலும், விருகம்பாக்கத்தில் உள்ள வளசரவாக்கம் மெகா மார்ட் அருகிலும், சோழிங்கநல்லூர் சோழிங்கநல்லூர் பால் பண்ணையிலும், மயிலாப்பூர் சிபி ராமசாமி சாலையிலும் உள்ள ஆவின் பார்லர்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஆவின் வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய இன்று முதல் ஆவின் பார்லர்கள் தேவைக்கேற்ப (சில நாட்கள்) 24 மணிநேரமும் செயல்படும். ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருள்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.