நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தினேஷின் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்பொழுது வரை கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இதய பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.