நெல்லை மாவட்டத்தின் பணகுடி அருகேயுள்ள லெப்பைக்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு நித்திஷ் (வயது 7), நிதிஷா (வயது 5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும், அதே பகுதியைச் சேர்ந்த சுதன், தபிஷா தம்பதியரின் குழந்தையான கபிசந்த் (வயது 4) ஆகிய மூவரும் நேற்று (04/06/2022) மதியம் 02.00 மணியளவில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகராஜின் அண்ணனான மணிகண்டனின் காரைத் திறந்து உள்ளே சென்று விளையாடிக் கொண்டிருந்தனர்.
காரினுள்ளே வெகுநேரம் விளையாடிய அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் வெளியேற நினைத்து கதவைத் திறக்க முயன்ற குழந்தைகளுக்குத் தெரியவில்லை. காற்றுப் புகாத காருக்குள் மூச்சுத்திணறிய மூன்று குழந்தைகளும் காரிலேயே மயங்கிச் சரிந்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில் வெகுநேரமாகியும் விளையாடச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைகள் கிடைக்காமல் போகவே, தற்செயலாக அந்தப்பக்கம் நின்றிருந்த காரைப் பார்த்தவர்கள் அதனுள் மூன்று குழந்தைகளும் மயங்கிக் கிடந்தது கண்டு பதறியவர்கள் மூவரையும் உடனடியாக மீட்டு பணக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைகளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதைக் கேட்டுக் கதறிய பெற்றோர்களின் துக்கம் நெஞ்சைக் கனக்க வைத்தது. இதுகுறித்த தகவலறிந்த பணக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடுமையான வெயில். பூட்டப்பட்ட காரினுள்ளே கடுமையான வெப்பத்தாலும், காற்று புகாத போதிலும், வெப்பத்தில் குழந்தைகளின் பிஞ்சு மேனி வெந்திருந்ததாகச் சொன்னார் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியான அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.
தகவலறிந்து பணக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த சபாநாயகர் அப்பாவு வாடிப் போய் இறந்த மூன்று பிஞ்சுகளையும் கண்டதும் கண்கலங்கிவிட்டார். அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன சபாநாயகர் அப்பாவு சோகம் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை எஸ்.பி.சரவணன் பிள்ளைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தினார். பிஞ்சு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருத்தல் கூடாது. எச்சரிக்கை... எச்சரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.