திருவண்ணாமலை அடுத்த பெரிய கோளாப்பாடி கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமாக தீபம் திருப்பதி என்கிற பெயரில் அடகு கடை வைத்துள்ளார். ஆகஸ்ட் 25- ஆம் தேதி காலை வழக்கம் போல் தனது அடகுகடையை திறக்க வந்துள்ளார். கடையை திறந்து உள்ளே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. காரணம், கடையின் பின்பக்கம் துளையிட்டு இரவு திருடர்கள் உள்ளே வந்துள்ளனர்.
திருட்டு கும்பல் அடகு கடையில் வைத்திருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளதை அறிந்து அதிர்ந்து போன வெங்கடேசன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மற்றும் பாச்சல் காவல் நிலையத்தில் இருந்து காவல் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடையில் அடகுக்கு வந்த தங்க நகைகள் வைக்க ஒரு லாக்கர் உள்ளது. அந்த லாக்கர் உடைக்கப்படாமல் இருந்தது. அதனை திறந்து சோதனை செய்ததில் நகைகள் இருப்பதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடத்துக்கு திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் கைரேகை போலீசார், மோப்ப நாயை வர வழித்து இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை- பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நகை அடகு கடைகள், சிறிய நகைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை நடத்துபவர்கள், இந்த திருட்டால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.