Skip to main content

விருதுநகர் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்? மன்றாடும் மாணிக்கம் தாகூர்!     

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 

“விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரா? இல்லவே இல்லை. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான்..” என்று எதிர் கோஷ்டியினர் தொகுதியில் பரப்பிவிட,   ‘என்னதான் நடக்கிறது?’ என்று டெல்லி சோர்ஸிடம் விசாரித்தோம். 

 

e

 

கிருஷ்ணகிரி அல்லது விருதுநகர் என்பதுதான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் விருப்பமாக இருக்கிறது.  கிருஷ்ணகிரி செல்லக்குமாருக்கு என்பது தெரிந்துவிட்டதால்,  விருதுநகர் தொகுதியைக் கேட்கிறார். இளங்கோவனுக்கு விருதுநகரை ஒதுக்குவதற்கு காங்கிரஸும் விரும்பவில்லை. திமுகவும் ஓகே சொல்லவில்லை. அதனால், தனக்கென்று  தொகுதி இல்லாத நிலையில் இளங்கோவன் டென்ஷன் ஆகிவிட்டார்.  தன்னுடைய ஆதரவாளரான முன்னாள் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் போன்றவர்களைத் தூண்டிவிட்டு, மாணிக்கம் தாகூருக்கு எதிராக  தலைமைக்குப் புகார்களைத் தட்டிவிடச் செய்தார்.

 

இதன்மூலம்,  விருதுநகர் தொகுதியில் கதர்ச்சட்டைகள் மத்தியிலேயே  மாணிக்கம் தாகூர் மீது அதிருப்தி நிலவுகிறது என்பதை சீரியஸான விவகாரமாக டெல்லி வரையிலும் கொண்டுபோக முடிந்தது. தனது ஆதரவாளர்கள் தரும் தொடர் அழுத்தத்தால்,  விருதுநகர் தொகுதி தனக்குக் கிடைத்துவிடும் என்றும் விருதுநகருக்குப் பதிலாக சிவகங்கையில் மாணிக்கம் தாகூர் போட்டியிடட்டும் என்றும் இளங்கோவன் காய் நகர்த்திவருவதை அறிந்த மாணிக்கம் தாகூர், விருதுநகர் தொகுதியைத் தவிர வேறு எந்தத் தொகுதியிலும் நிற்கப்போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் உறுதி காட்ட ஆரம்பித்திருக்கிறார்.  

 

m

 

சிவகங்கையிலோ,  கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லாபி ஒன்று வேகம் காட்டிவருகிறது. அதனால், சிவகங்கையில் மாணிக்கம் தாகூரை நிற்க வைக்கலாம் என்ற திட்டத்தைக்  கட்சித் தலைமை வரைக்கும் கொண்டு போயிருக்கின்றனர்.  திமுக தரப்பிலோ, இத்தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் என்பதால்,  மாணிக்கம் தாகூர்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று தங்களின் கருத்தை முன்வைத்திருக்கின்றனர். மாணிக்கம் தாகூரோ,  ‘ஒருவேளை சிவகங்கை தொகுதியைத் தனக்கு மாற்றிக் கொடுத்து, விருதுநகர் தொகுதியில்  எதிர் அரசியல் செய்பவர்களின் திட்டம் பலித்துவிட்டால்?’ என்ற கோணத்தில் சிந்தித்து, முடிந்தமட்டிலும் மன்றாடுகிறார்.    அவரிடம்  ‘கரும்பு தின்னக் கூலியா? தொகுதியில் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கில்லாத  கார்த்தி சிதம்பரத்துக்கே கடந்த தேர்தலில் 1,04,678 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. காரணம் – காங்கிரஸ் வாக்கு வங்கி வலுவாக உள்ள தொகுதி சிவகங்கை.’ என்று தூபம் போட்டு வருகின்றனர். 

 

விருதுநகர் தொகுதியில் உள்ள இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் “அண்ணன் 70 வயதைக் கடந்துவிட்டார். இந்தத் தடவை சீட் கிடைக்கவில்லை என்றால், அடுத்துவரும் தேர்தலில் நிச்சயம் சீட் தர மாட்டார்கள். அப்படி நடந்துவிட்டால்,   அவருடைய அரசியலே அஸ்தமித்துவிடும்.  அதனால்தான், விருதுநகர் தொகுதியைப் பிடிவாதமாகக் கேட்டு வருகிறார்.  என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை.” என்று விசுவாசத்தை வெளிப்படுத்தினார். 

 

கேட்டவருக்கெல்லாம் பிய்த்துத்தர பாராளுமன்ற தொகுதி அப்பம் அல்லவே! 

 


 

சார்ந்த செய்திகள்